உணவை தாமாக உட்கொள்ள முடியாமல் உயிரிழக்கும் கோவிட் தொற்றாளர்கள்

256 0

உணவை தாமாக உட்கொள்ள முடியாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கின்ற கோவிட் நோயாளர்கள் உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன என கிண்ணியா நகர சபையின் உறுப்பினரும்,சமூக ஆர்வலருமான எம்.எம். மஹ்தி தெரிவித்தார்.

கிண்ணியாவில் தனது அலுவலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்களில் சிலர் தாமாக உணவை உண்பதற்கோ அல்லது தேநீரை தயாரித்து குடிப்பதற்கோ இயலாத நோயாளர்கள் சக்தி இழந்து வீணாக உயிர் இழக்கின்ற வாய்ப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே இவ்வாறான நோயாளர்களை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை வழங்குவதை விட முறையான சுகாதார ஆலோசனை வழிகாட்டலின் பிரகாரம் தனது வீட்டில் வைத்து பராமரிக்கப் படுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

அல்லது வைத்தியசாலையில் உதவியாளர் ஒருவரை அனுமதிக்கின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சுகாதார திணைக்கள அதிகாரிகளிடமும் வைத்தியர்களிடமும் கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.