ஸ்ரீபெரும்புதூரில் ஆக்சிஜன் தொழிற்சாலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

234 0

ஒரகடம் டேம்லர் தொழிற்சாலைக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 18 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி பல்வேறு கல்லூரி வளாகங்களிலும் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் தற்போது தமிழகத்தில் தேவையான அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர் லாரிகள் ரெயில் மூலம் கொண்டு வரப்படுகிறது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் போந்தூரில் தினமும் 180 டன் ஆக்சிஜன் தயாரிக்கும் ஐநாக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்றார். அங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பகுதிகளை பார்வையிட்டார்.

அங்கு இருந்த அதிகாரிகள் தொழிற்சாலையில் நடைபெறும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

முன்னதாக ஒரகடம் டேம்லர் தொழிற்சாலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு 18 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கும் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அவருடன் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் சென்றிருந்தனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு விரிவாக பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அரசு எடுத்து வரும் முயற்சிகளை விரிவாக விளக்கிக் கூறினார்.