அரசு பணிகளில் தி.மு.க.,வினர் தலையீடு: முதல்வர் தடுக்க வேண்டும்

428 0

அரசு பணிகளில் கட்சியினர் தலையீடு இருக்கக்கூடாது. இதற்கு முற்றிலும் முரணான வகையில், தி.மு.க.,வினரின் செயல்பாடுகள் இருக்கின்றன’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னையில், கொரோனா தொற்று தடுப்பு பணியில், நன்கு பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள், சுகாதாரம், பொறியியல், வருவாய் துறை பணியாளர்களுடன் இணைந்து, திறம்பட பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எணணிக்கை, தினசரி அதிகரித்து வந்தாலும், சென்னையை பொறுத்தவரை குறைந்து வருகிறது;
இது ஆறுதலான விஷயம்.இந்நிலையில், தி.மு.க.,வினர் சென்னை, அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகம் சென்று, தற்போதுள்ள களப்பணியாளர்களை நீக்கி விட்டு, அவர்கள் சொல்லும் நபர்களை பணியில் அமர்த்த வேண்டும் என, மிரட்டி உள்ளனர்.அதற்கு அதிகாரிகள், ‘கட்சியினர் பரிந்துரையில், களப்பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை. ‘பயிற்சி பெற்று, திறம்பட பணியாற்றும் களப்பணியாளர்களை மாற்றினால், நோய் தடுப்பு பணியில் தொய்வு ஏற்படும்’ எனக் கூறியுள்ளனர்.

இது போன்ற முறையை, அனைத்து இடங்களிலும் தி.மு.க.,வினர் கடைப்பிடித்தால், கொரோனா நோய் தடுப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும். முதல்வருக்கு அவப்பெயர்ஏற் படும்.அரசு பணிகளில், கட்சியினரின் தலையீடு இருக்கக் கூடாது. அதற்கு முற்றிலும் முரணான வகையில், தி.மு.க.,வினரின் செயல்பாடுகள் இருக்கின்றன.எனவே, கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொய்வின்றி, தங்கு தடையின்றி நடக்க, முதல்வர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.