முழு ஊரடங்கு நடவடிக்கை தீவிரம்- மாவட்ட எல்லைகளுக்கு போலீசார் சீல்

209 0

சென்னையில் மட்டும் ஊரடங்கை கண்காணிக்க 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 380 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கட்டுப்படாமல் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஏற்கனவே கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கத்தை கடந்த 10-ந்தேதி அறிவித்தது. இந்த பொது முடக்கம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

ஆனால் பொது முடக்கத்தையும் மீறி மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால், நேற்று முதல் வருகிற 31-ந்தேதிவரை தளர்வு இல்லாத முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது.

இதையொட்டி மாநிலம் முழுவதும் மருந்து, பால், பத்திரிகை விற்பனை கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

வாகன போக்குவரத்து இல்லாமல் மாநிலம் முழுவதும் அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு மக்கள் செல்வதை தடுப்பதற்காக மாவட்ட எல்லைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும் அங்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் ஊரடங்கை கண்காணிக்க 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 380 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.

ஒரு சில பாலங்களை தவிர 38 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய மேம்பாலங்களையும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடி உள்ளனர். அதே போல் நகர் முழுவதும் உள்ள 408 போக்குவரத்து சிக்னல்கள் முடக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் அனுமதியின்றி வந்த வாகன ஓட்டிகளை போலீசார் விசாரித்த காட்சி.

மக்கள் நடமாட்டம் இருப்பதை ‘டிரோன்’ கேமரா மூலம் போலீசார் கண்காணித்து நேரில் சென்று எச்சரிக்கின்றனர். சென்னையில் நெரிசல் மிகுந்த மிக முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை, ராஜீவ்காந்தி சாலை, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ராஜாஜி சாலை, கடற்கரை சாலை, ஆற்காடு சாலை, கிழக்கு கடற்கரை சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

அத்தியாவசிய வாகனங்கள், முன்கள பணியாளர்களின் வாகனங்கள் மட்டுமே சாலைகளில் அனுமதிக்கப்பட்டன. தியாகராயநகர், பாரிமுனை, புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை கடை வீதிகள் நிறைந்த பகுதிகள் அனைத்தும் முழுவதுமாக வெறிச்சோடி காணப்படுகிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னையின் குட்டி வணிகத்தீவு எனப்படும் தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான்ரோடு, பாண்டிபஜார் ஆகிய பகுதிகள் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி உள்ளன.

ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். மருத்துவ தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து தேவையில்லாமல் ரோடுகளில் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

அதேபோல் அனுமதி இல்லாத இருசக்கர வாகனங்கள் ரோட்டில் செல்ல அனுமதிக்கவில்லை. இதை மீறி வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை ஊரடங்கு முடிந்த பிறகு கோர்ட்டு மூலம்தான் மீட்க முடியும்.

போலீசாரின் நடவடிக்கை கடுமையாக இருந்த போதிலும் பொது மக்களை எச்சரித்தும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகிறார்கள்.

போலீசார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், ‘‘தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் விதிமுறைகளை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசிய பணி தொடர்பானவர்கள் தவிர யாரும் வெளியே வரக்கூடாது’’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதேபோல் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் ‘‘இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மூலமாகத்தான் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்

ஊரடங்கு நமது நன்மைக்காகத்தான் அரசு போட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து அனைவரும் வீட்டில் இருங்கள். மருத்துவத் தேவையைத் தவிர வேறு காரணங்களுக்காக வெளியில் வராதீர்கள். அரசின் உத்தரவுகளை மறக்காமல் பின்பற்றுங்கள். மதித்து நடந்து கொள்ளுங்கள். முழு ஊரடங்கு என்பது கசப்பு மருந்துதான். ஆனாலும் மக்கள் அதை அருந்தியே தீர வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.