முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

214 0

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடும் பணிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் என அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை கையாண்டாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை. இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு என பல கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனா வீரியத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒருவார காலம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார். ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஏதுவாக 2 நாட்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. மக்களும் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர்.

அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஒருவார கால தளர்வு இல்லா ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதையொட்டி மாநிலம் முழுவதும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. இதுநாள் வரை காலை 10 மணி வரை செயல்பட்டு வந்த மளிகை-காய்கறி கடைகளும் முழுவதும் அடைக்கப்பட்டன. இதனால் கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் யாவும் நேற்று முழுவதுமாக அடைக்கப்பட்டு ஆள் அரவமின்றி காட்சி தந்தது.

இந்நிலையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஆலோசனையில் வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை செயலாளர் கோபால் உள்ளிட்ட  தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.