நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்யுங்கள் : வாகனங்களில் பயணிக்கவும் , வாகனங்களை தரித்து நிறுத்தவும் அனுமதி இல்லை

264 0

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற தினங்களில் எந்தவொரு நபருக்கு வாகனங்களில் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. தாம் வசிக்கும் பகுதிக்கு மிகவும் அண்மையிலுள்ள விற்பனை நிலையங்களுக்கு நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

அத்தோடு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே செல்ல அனுமதிக்கப்படுவர். இதன் போது தேசிய அடையாள அட்டை முறைமை பின்பற்றப்படாது என்ற போதிலும் , அதனை எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும். மேலும் முச்சகரவண்டி உள்ளிட்ட வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே வெளியில் செல்ல முடியும். வேறு எந்தவொரு காரணிக்காவும் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆடை விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி வழங்கப்படமாட்டாது.

மீன், மரக்கறி, அரிசி , இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்கள், மற்றும் பேக்கரி உற்பத்திகள் விற்பனை செய்யும் கடைகளை என்பவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்திலும் பயணிக்க முடியாது. எனினும் இவ்வாறு தனித்து செல்ல முடியாதவர்களுக்காக விசேட வேலைத்திட்டம் திட்டடமிடப்பட்டுள்ளது.

பிரதான வீதிகளிலோ அல்லது வர்த்தக நிலைய வளாகங்களிலோ வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. இது தொடர்பில் சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே வாகனங்களில் வர வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றோம்.

மேலும் வைத்தியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையைப் போன்ற போலியான இலட்சினை பதிக்கப்பட்ட வாகனங்களில் சிலர் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடும் பொலிஸாருக்கு சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பான சட்டம் மேலும் கடுமையாக்கப்படும். எனினும் வைத்தியசாலைகளுக்கு செல்வோருக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது.

இங்கிரிய பொலிஸ் பிரிவில் முச்சக்கரவண்டியில் சென்ற சாரதியொருவர் மருந்து கொள்வனவு செய்வதற்காக செல்வதாகக் கூறி போதைப்பொருள் கொண்டு சென்றுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார்.