சிறிலங்கா காவல் துறை மற்றும் இராணுவ கண்காணிப்பிற்கு மத்தியில் வழிபாடு

226 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு இன்று (24) அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் சிறிலங்கா காவல் துறை மற்றும் இராணுவ கண்காணிப்பிற்கு மத்தியில் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

கடந்த 17 ஆம் திகதி கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் கடந்த ஏழு நாட்கள் கடல் நீரில் எடுக்கப்பட்ட தீர்த்தத்தில் எரிந்த தீபம் ,தீர்த்தம் மற்றும் மடைப்பண்டங்களுடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு இன்று அதிகாலை (24.05.21) எடுத்துவரப்பட்டு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு பூசைகள் நடைபெற்றுள்ளன.

ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தவோ அல்லது ஆலயத்தில் வழிபாடுகுளை மேற்கொள்ளவோ பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. ஆலயத்திற்கு செல்லும் இரண்டு பிரதான வீதிகளிலும் இராணுவ வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் ,அனுமதிக்கப்பட் 51 பேர் மாத்திரம் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

காவல் துறை ,மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் வழிபாட்டு பூசைகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை ஆலயத்தின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக பக்தர்கள் புதுக்குடியிருப்பு, கேப்பாபிலவு வீதியில் வருகை தந்த போதும் வீதியில் உள்ள இராணுவ வீதிசோதனை நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

ஆலயத்தினை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் சிலர் வளாகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் அவர்கள் ஆலயத்திற்கு செல்லும் வீதியின் சந்திகளில் தேங்காய் உடைத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றியுள்ளனர்.