இந்தியாவில் கொரோனா சூழல் : ஐ.நா., பொதுச் செயலர் வேதனை

277 0

அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்படும் இந்தியா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில், மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதை பார்க்கும்போது வேதனையளிக்கிறது,” என, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறினார்.

உலகம் முழுதும் கொரோனா வைரசால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுகாதார மாநாடு நடந்தது.

அப்போது பேசிய, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய நாளில் இருந்து, ஒன்றை மட்டும் தொடர்ந்து கூறி வந்தேன். ‘அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை, யாருக்கும் பாதுகாப்பு இல்லை’ என, எச்சரித்து வந்தேன்.
தடுப்பூசிகள், மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட எதுவும் தேவையான அளவு கிடைக்காமல், பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள், கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சங்களை தொட்டுள்ளன. இந்த நாடுகளில், நம் கண்களுக்கு முன், மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது வேதனை அளிக்கிறது.
நாம் ஒன்றை நன்றாக உணரவேண்டும். நாம் வைரசுடன் போரிட்டு வருகிறோம்.

மிகப்பெரிய ஆயுதம்

இந்த போரில், நாம் நம்முடன் வைத்துள்ள ஆயுதங்களை ஆய்வு செய்யவேண்டியது அவசியம். கொரோனாவை வீழ்த்த நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம், தடுப்பூசி.
மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தவேண்டும். ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகள் வாயிலாக மட்டுமே, இந்த கொரோனாவுக்கு நம்மால் முடிவுகட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.