தேன்கனிக்கோட்டை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை

264 0

நிலம் விற்பனை தொடர்பாக லோகேசுக்கும், குருபரப்பள்ளியை சேர்ந்த ரெட்டி என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தளி அருகே உள்ள பெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 30). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு லோகேஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் ஒரு காரில் 4 பேர், லோகேஷ் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த லோகேசை, எழுப்பினர். நிலம் விற்பனை சம்பந்தமாக பேச வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

இதனால் தூக்க கலக்கத்தில் இருந்த லோகேஷ் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தார். உடனே மர்ம கும்பல், திடீரென லோகேசை தாக்கினர்.

மேலும் அவர்கள் கைத்துப்பாக்கியால் லோகேசை சுட்டனர். இதில் மார்பில் குண்டுபாய்ந்து அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த லோகேசின் மனைவி ஜெயந்தி, துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு லோகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். மேலும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மின்னல் வேகத்தில் மர்ம கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.

இதைத்தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த லோகேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் தேன்கனிக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. சங்கீதா, மற்றும் தளி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். லோகேஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறில் லோகேஷ் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

நிலம் விற்பனை தொடர்பாக லோகேசுக்கும், குருபரப்பள்ளியை சேர்ந்த ரெட்டி என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதில் லோகேஷ் ரூ.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் பலமுறை ரெட்டி, லோகேசிடம் பணம் கேட்டு வந்துள்ளார். ஆனால் லோகேஷ் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரெட்டி , தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து நள்ளிரவு லோகேசை கைத்துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர் என்று தெரிய வந்தது.