ஊடக பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ம.நீ.ம.,

221 0

கொரோனாவால் மரணமடையும், ஊடகத்தினர் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும்’ என, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் தொழிலாளர் நல அணி அறிக்கை:பேரிடர் காலம் முதல் போர்க்களம் வரை, ஊசி நுழைய முடியாத இடத்தில் கூட உள்நுழைந்து, உண்மை சம்பவங்களை, உலகறிய செய்வதில், பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள், புகைப்பட, ஒளிப்பதிவு கலைஞர்களுக்கு, மிகப்பெரிய பங்குண்டு.

கடந்தாண்டு பீடித்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, ஏராளமான பத்திரிகையாளர்கள் பலியாகி வருவது, மிகுந்த வேதனை அளிக்கிறது.அதே நேரம், தி.மு.க., அரசு, பத்திரிகை, தொலைக்காட்சி ஊடக வியலாளர்களை, முன்களப் பணியாளர்களாக அறிவித்தது, சற்றே ஆறுதல் அளிக்கிறது.ஆனால், தற்போதைய கொரோனா இரண்டாவது அலை, இந்தியா முழுதும் அதிகம் பரவி, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், செய்தியாளர்கள், புகைப்படம், ஒளிப்பதிவு கலைஞர்கள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

அவர்கள் குடும்பத்தினரின் எதிர்காலம் குறித்து, எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. எனவே, முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு, கொரோனா பேரிடர் காலத்தில், தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்குவதுடன், தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.