உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு தினமும் சாப்பாடு வழங்கும் தொண்டு நிறுவனத்தினர்

247 0

தொண்டு நிறுவனத்தினர் தினமும் சமையல் செய்து அவற்றை பார்சலாக கட்டி பகுதி வாரியாக தெருத்தெருவாக சென்று தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

இந்த நாய்கள் ஒட்டலில் இருந்து கொட்டப்படும், உணவுகளையும், கடைவீதியில் வீசப்படும் பண்டங்களையும் சாப்பிடுகின்றன. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லாததால் உணவு கழிவுகள் கொட்டுவதில்லை, டீக்கடைகள் திறக்கப்படாததாலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததாலும் தெரு நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன.

விலங்குகள் நல அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தெரு நாய்களுக்கு உணவு வழங்க கால்நடைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தொண்டு நிறுவனத்தினர் தினமும் சமையல் செய்து அவற்றை பார்சலாக கட்டி பகுதி வாரியாக தெருத்தெருவாக சென்று தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் தெரு நாய்களுக்கு உணவு வழங்க உதவி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மிருகவதை தடுப்பு சங்க துணை தலைவர் அனுஷாசெல்வம் கால்நடைப் பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வழங்க 375 கிலோ அரிசி வழங்கினார்.
உணவு பார்சல் செய்யப்படும் காட்சி

இந்த அரிசி வேலூர், பள்ளிகொண்டா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ப்ளூ கிராஸ் தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தினமும் உணவு சமைத்து நாய்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா முழு ஊரடங்கு காரணமாக வேலூர் கோட்டை மூடப்பட்டதால் குதிரைகளை வைத்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் அவர்கள் தங்களது குதிரைகளுக்கு தீவனம் அளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

வேலூர் மிருகவதை தடுப்பு சங்க துணை தலைவர் அனுஷாசெல்வம் குதிரைகளுக்கு 175 கிலோ கால்நடைதீவனமும், குதிரை தொழிலாளர்களுக்கு 25 கிலோ அரிசியும் வழங்கினார்.

இதுகுறித்து கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில்:-

வேலூரில் வாழ்வாதாரம் இழந்த குதிரை தொழிலாளர்களுக்கு அரிசியும், அவர்கள் வளர்க்கும் குதிரைகளுக்கு கால்நடை தீவனமும் வழங்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாக தெருநாய்கள் உணவின்றி தவிப்பதால் அவைகளுக்கு உதவ விருப்பம் உள்ளவர்கள் கால்நடைத்துறை அலுவலகத்தை 94450 01131 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.