சுமார் 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிந்துள்ளது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயணம் செய்த பயணிகளின் கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பத்து வருட வாடிக்கையாளர் தரவு கசிந்துள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இ மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
2011 ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் 2021 பிப்ரவரி 3-ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட சுமார் 45 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளது.
ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட பயணிகள் அமைப்பான சீடாவில் இருந்து வாடிக்கையாளர்களின் பெயர்கள், பிறந்த தேதி, தொடர்பு தகவல் மற்றும் டிக்கெட் தகவல்களும் கசிந்துள்ளன.
சீடா பிஎஸ்எஸ் பயணிகள் சேவை அமைப்பின் எங்கள் தரவு செயலி (பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை சேமித்து வைக்கும் அமைப்பு) சமீபத்தில் சைபர் தாக்குதலுக்கு ஆளாக நேர்ந்ததால் சில பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் கசிய வழிவகுத்தது. இந்த சம்பவத்தால் சுமார் 45,00,000 வாடிக்கையாளர்கள் தரவுகள் கசிந்துள்ளன என அதில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.