தமிழகத்தை மிரட்டும் கருப்பு பூஞ்சை தொற்று- சிறுமி உள்பட 9 பேருக்கு தீவிர சிகிச்சை

398 0

இயற்கையாகவே மண், இலைதளைகளில் காணப்படும் இந்த பூஞ்சை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தொற்றிக்கொள்கிறது.தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கமே கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வில் இருந்து மீண்டவர்களை புதிதாக கருப்பு பூஞ்சை மிரட்டுகிறது.

இயற்கையாகவே மண், இலைதளைகளில் காணப்படும் இந்த பூஞ்சை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தொற்றிக்கொள்கிறது.

கண், மூக்கு வழியாக உடலுக்குள் புகும் இந்த பூஞ்சை கண்ணை பறிக்கிறது. மூளையை தாக்கி செயலிழக்க வைத்து உயிரையே பறித்து விடுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களில் இதுவரை 90 பேர் பலியாகிவிட்டனர்.

இதேபோல் அரியானாவில் 14 பேர், ஜார்கண்டில் 4 பேர் மற்றும் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா ஒருவரும் பலியாகிவிட்டனர்.

புதுவையிலும் 20 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, விழுப்புரம் மாவட்டங்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் சிலர் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 70 வயது முதியவர், கோலியனூரில் 52 வயது முதியவர், திண்டிவனத்தில் 65 வயது முதியவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் விழுப்புரத்தில் தனியார் ஆஸ்பத்திரியிலும் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சென்னையில் 12 வயது சிறுமியும் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தீவிரமான தலைவலி, கண்பகுதியில் வீக்கம், கண்ணை சுற்றி சிவப்பு நிறம், மூச்சுவிடுவதில் சிரமம், ரத்தவாந்தி, மனநிலையில் மாற்றம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.

இந்த நோய் தாக்கியவர்களுக்கு ஆம்பொனெக்ஸ், என்ற ஊசி மருந்து பரிந்துரைக்கிறார்கள். இந்த மருந்துக்கு தமிழகத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கிடையில் அரசும் முன்னெச்சரிக்கையாக இந்த மருந்து 5 ஆயிரம் ‘டோஸ்’ வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.