ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின் புதல்வர் கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் துறைமுக நகருக்கு வசதிகளை வழங்கும் நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்துள்ளதாக தெரியவருகிறது.
தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதி சட்டத்தரணி சுனில் வட்டகல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சத்துர கப்ரால் செக் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவட் லிமிட்டட் என்ற பெயரில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதாக வட்டகல குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகருக்கான நீர் மற்றும் மின் விநியோகத்தை வழங்குதல், துறைமுக நகரின் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் இடைதரகு நிறுவனமாக செயற்பட்டு கூடியளவில் இலாபம் பெறும் நோக்கில் இந்த நிறுவனத்தை சத்துர கப்ரால் ஆரம்பித்துள்ளதாகவும் இடைதரகு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் ஷரத்துக்கள் துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வட்டகல குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான திட்டங்கள் ஊடாக இடைதரகு நிறுவனங்களாக அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு தவறான முறையில் பணத்தை சம்பாதிக்க வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சத்துர கப்ராலின் தந்தையான அஜித் நிவாட் கப்ரால், தற்போதைய அரசாங்கத்தில் நிதி ராஜாங்க அமைச்சராகவும் சந்தை முதலீடு மற்றும் அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.