அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு 2,100 டாக்டர்கள் தற்காலிக நியமனம்- அரசு உத்தரவு

246 0

கொரோனா நோயாளிகளை கவனிக்க அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு 2,100 டாக்டர்களை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேசிய பேரிடராக கொரோனா தொற்று நோயை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதுமே தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வீசுகிறது.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம் 7-ந்தேதியன்று முதல்-அமைச்சர் பேசினார். அப்போது, ஏற்கனவே தமிழகத்தில் 12 ஆயிரத்து 500 ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கும் நிலையில் கூடுதலாக 12 ஆயிரத்து 500 படுக்கை வசதிகளை உருவாக்க வேண்டும் என்று அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், கொரோனா நோயாளிகளை கவனிப்பதற்காக 2 ஆயிரம் மருத்துவ அலுவலர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கும், அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கும் 2,100 மருத்துவ அலுவலர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவக்கல்வி இயக்குனர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டாக்டர்
அவரது கோரிக்கையை அரசு ஏற்கிறது. 2,100 மருத்துவ அலுவலர்களையும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 6 மாதங்களுக்கு நியமிக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிடுகிறது. அவர்களின் மாத ஊதியமாக ரூ.60 ஆயிரம் வழங்க, ரூ.75.60 கோடி தொகைக்கு அரசு அனுமதி அளிக்கிறது.
இவர்களது நியமனம், மாவட்ட கலெக்டரின் தலைமையில் அமையும் குழுவின் முடிவின்படிதான் செய்யப்பட வேண்டும். தற்காலிக பணிக்காகத்தான் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை நியமனம் செய்யப்படுகிறவருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.