பிரான்சு கிளிச்சி,மற்றும் செவ்ரோன் நகரங்களில் மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல்.

599 0

பிரான்சில் நேற்று 18.05.2021 காலை 11.00மணிக்கு கிளிச்சி என்னும் இடத்தில் பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் மூதூரில் 2006 படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெற்றது.

கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிச்சி தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் திரு.பரராசசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 1993 ஆம் ஆண்டு பூநகரி நாகதேவன்துறைச் சமரில் சாவடைந்த கப்டன் இராவணன் (கோணேஸ்) அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

நினைவுரையினை பிரான்சு சோதியா கலைக்கல்லூரின் நிர்வாகி திரு.செல்வகுமார் ஆற்றியிருந்தார்.மாநகர உதவி முதல்வர் மற்றும் சர்வதேச மனிதநேயக்கட்டமைப்பின் தலைவர் இவர்களும் ஏனைய வெளிநாட்டுக்கட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.மாநகர உதவி முதல்வர் தெரிவிக்கையில், எமது நாட்டில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட அநீதியை தாம் அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும் பல ஊடகங்களில் மேலும் விடயங்களை அறிந்து கொண்டதாகவும் அன்றுமுதல் தம்மாலான உதவிகளை கிளிச்சி தமிழ்ச் சங்கத்திற்கு செய்துவருவதாகவும் தெரிவித்தார்.

விரைவில் தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை தமது மாநகரசபையில் கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.கிளிச்சி தமிழ்ச் சங்க இளையோர் அமைப்பினரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர்.நன்றியுரையினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் திரு. க.சச்சிதானந்தம் (சச்சி) அவர்கள் ஆற்றியிருந்தார்.நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு நாள் மே 18 பிரான்சில் காலை 10.00மணிக்கு செவ்ரோன் என்னும் மாநகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக செவரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பொதுச்சுடர், ஈகைச்சுடர்,மலர்வணக்கம், முள்ளிவாய் க்காலில் உயிர்கொடுத்தவர்களின் உறவுகள் நினைவுச்சுடர் ஏற்றிவைத்தனர். நிகழ்வில் மாநகரமுதல்வர்,துணைமுதல்வர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு உரைகளும் ஆற்றினர்.