ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் 2-வது வாரமாக தொடர்ந்து வரும் நிலையில் சண்டை நிறுத்தத்துக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் கடந்த 10-ந்தேதி பயங்கர மோதல் வெடித்தது.
ஹமாஸ் போராளிகள் காசா நகரில் இருந்து இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்த, அதற்கு பதிலடியாக காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.
இப்படி இரு தரப்புக்கும் இடையிலான கடுமையான சண்டை 2-வது வாரமாக தொடர்கிறது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் காசாவில் இதுவரையில் 219 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையில் இடைவிடாமல் தொடரும் சண்டையால் அங்கு போர் பதற்றம் உருவாகியுள்ளது. இது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவி மக்களின் உயிரிழப்பை தவிர்க்க இருதரப்பும் உடனடியாக மோதலை கைவிட வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்கா எகிப்து உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் காசாவில் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. ஆனால் சர்வதேச சமூகத்தின் இந்த முயற்சிகளை வீணடிக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் காசா நகர் மீதான ராணுவ நடவடிக்கை முழுவேகத்தில் தொடர்வதாகவும், இப்போதைக்கு சண்டை நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை எனவும் இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதேபோல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி ஏற்படும் வரை காசா நகர் மீதான தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் போர் குற்றங்களில் ஈடுபடுகிறது
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘அமைதியை மீட்டெடுப்பதற்கு இஸ்ரேல் ராணுவம் போராடுகிறது. நீங்கள் அவர்களை (ஹமாஸ் போராளிகள்) சமாளிக்க 2 வழிகள் மட்டுமே உள்ளனர். நீங்கள் அவர்களை வெல்ல வேண்டும். அது எப்போதும் ஒரு திறந்த வாய்ப்பு. அல்லது நீங்கள் அவர்களை தடுக்க வேண்டும். அதை தான் இஸ்ரேல் ராணுவம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் நாங்கள் எதையும் (சண்டை நிறுத்தத்தை) நிராகரிக்கவில்லை’’ எனக் கூறினார்.
இதனிடையே பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேல் காசாவில் போர் குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘காசாவில் இஸ்ரேல் ஒழுங்கமைக்கப்பட்ட அரசு பயங்கரவாதம் மற்றும் போர்க்குற்றங்களை நடத்துகிறது. சர்வதேச நீதிமன்றங்களுக்கு முன்னால் இது போன்ற குற்றங்களைச் செய்பவர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க பாலஸ்தீனியர்கள் தயங்க மாட்டார்கள்’’ எனக் கூறினார்.