கோவையில் கொரோனாவை விரட்ட தெருக்களில் வேப்பிலை தோரணம் கட்டும் மக்கள்

277 0

கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் கொரோனா அச்சத்தால் தங்கள் தெருக்கள் முழுவதும் வேப்பிலையை தோரணமாக கட்டி வருகின்றனர்.இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அரசு கடந்த 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னையை அடுத்து கோவையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 3 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதியில்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பரவிவரும் கொரானா தொற்றை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் அரசு பொதுமக்களிடம் அவசியமில்லாமல் வெளியே செல்லவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறது.

தவிர்க்க முடியாத காரணத்திற்காக வெளியே சென்றால் கட்டாயம் முககவசத்தை பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், வெளியே சென்று வீடு திரும்பியதும் கைகளை நன்றாக சோப்பை பயன்படுத்தி கழுவவேண்டும் என்பது போன்ற பல்வேறு நோய்தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் கொரோனா அச்சத்தால் தங்கள் தெருக்கள் முழுவதும் வேப்பிலையை தோரணமாக கட்டி வருகின்றனர். மேலும் வேப்பிலையை நீரில் கலந்து கிருமி நாசினியாக வீதிமுழுவதும் தெளித்து வருகிறார்கள். கொரோனா போன்ற கொடிய நோயை விரட்டி தங்களை பாதுகாத்துக்கொள்ள தங்களின் நம்பிக்கைக்காக இவ்வாறு செய்து வருவதாக கூறினர். இதனால் அந்த பகுதி முழுவதும் பச்சைபசேலென காட்சி அளித்தது.