கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு- மதுரையில் மேலும் 3 மின் தகன மேடை

214 0

மதுரை மாவட்டத்தை பொருத்தவரை நோய் தொற்று பாதிப்பு நோயாளிகளை காட்டிலும் குணமடைவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

மதுரையில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது. இதன் காரணமாக தினமும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து அவர்களுக்கு மதுரை மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தென் மாவட்டங்களை பொருத்தவரை கொரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளிப்பதில் பிரசித்தி பெற்ற பல மருத்துவமனைகள் இங்கு உள்ளன.

எனவே சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்டோர் மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தை பொருத்தவரை நோய் தொற்று பாதிப்பு நோயாளிகளை காட்டிலும் குணமடைவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தினமும் பலர் பலியாகி வருகின்றனர். இவர்களது உடல்கள் மதுரையில் உள்ள சுடுகாடுகளில் தகனம் செய்யப்பட்டு வருகிறது.

மதுரை மாநகரில் 11-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மயானங்கள் உள்ளது. ஆனால் மூலக்கரை, தத்தனேரி, கீரைத்துறை ஆகிய 3 பகுதிகளில் மட்டும் நவீன அம்சங்களுடன் கூடிய மின் தகன மேடைகள் உள்ளன. இதில் தத்தனேரி தவிர மற்ற 2 மயானங்கள் தனியார் பங்களிப்புடன் இயங்கி வருகிறது.

தத்தனேரி மயானம் மட்டும் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. அங்கு ஏற்கனவே 2 மின் தகன மேடைகள் உள்ளன. இதேபோல் கீரைத்துறை சுடுகாட்டில் ஒரு மின் தகன மேடை உள்ளது.

இந்த 2 சுடுகாடுகளில் மட்டும் தான் மதுரை ஆஸ்பத்திரிகளில் இருந்து வரும் பெரும்பாலான பிணங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. மின் தகன மேடையில் ஒரு பிணத்தை எரிக்க குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஆகும். இதனால் தினமும் 50 பிணங்கள் வரை வரிசையில் காத்து இருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இதையடுத்து கூடுதலாக 3 மின் தகன மேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக மதுரை மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் கூறியதாவது:-

மதுரை மயானங்களில் உள்ள மின் மேடைகளில் பிணங்களை தகனம் செய்ய வெகு நேரம் ஆகிறது. இதனை கருத்தில் கொண்டு மதுரை தத்தனேரி, கீரைத்துறை ஆகிய 2 மயானங்களிலும் ரூ.90 லட்சம் மதிப்பில் கூடுதலாக 3 யூனிட் மின்மேடைகளை அமைப்பது என்று மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மதுரை தத்தனேரியில் ஏற்கனவே 2 மின் தகன மேடைகள் உள்ளன. அங்கு மேலும் 2 மின் மயானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கீரைத்துறை சுடுகாட்டில் ஒரு மின் தகன மேடை உள்ளது. இந்த நிலையில் அங்கு மேலும் ஒரு மின் மயானம் தயாராகிறது.

தத்தனேரி, கீரைத்துறையில் புதிதாக மின் தகன மேடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இன்னும் 10 நாட்களில் அவை தயாராகி செயல்பட தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.