காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல வேண்டும். மருத்துவம், இன்டர்வியூ, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக வாகனங்களில் செல்லலாம்.
புதுவை மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24-ந்தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீடிக்கிறது. ஊரடங்கில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும். அதேநேரம், கூடுதலாக சில கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜூஸ் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி, அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட வேண்டும். மற்ற தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மருந்து, மருத்துவம், சானிடைசர், ஆக்சிஜன், பாதுகாப்பு, விவசாயம், உரம் மற்றும் அவை தொடர்பான தொழிற்சாலைகள் செயல்படலாம்.
மேற்கண்ட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு தேவையான பேக்கேஜிங் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றுக்கான ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள், ஏற்றுமதி தொழிற்சாலைகளுக்கும் அனுமதி உண்டு.
வளாகத்திலேயே தங்கி வேலை செய்யும் ஊழியர்களை கொண்டு மட்டும் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் தொடர்ச்சியாக இயங்கும் தொழிற்சாலைகளுக்கும் ஊரடங்கில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு சொந்தமான வாகனங்களில் தான் ஊழியர்கள் பயணம் செய்ய வேண்டும்.
காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல வேண்டும். மருத்துவம், இன்டர்வியூ, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக வாகனங்களில் செல்லலாம். அதுவும், டிரைவருக்கும், பயணிப்பவருக்கும் இடையே சமூக இடைவெளிக்கான தடுப்பு ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் ஊழியர் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரது பிரிவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
தொழிற்சாலை முழுவதும் சானிடைசர் தெளிக்க வேண்டும். இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. தேவையின்றி வாகனங்களில் சுற்றினால் அபராதம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு பூர்வா கார்க் கூறினார்.
தொடர்ந்து அவரிடம், கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க என்ன காரணம்? என கேட்டபோது, உயிரிழப்பு குறித்து தினமும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருகிறோம்.
மருத்துவமனையில் சேர்ந்து 5 நாட்களுக்குப்பிறகு சிகிச்சை பலனின்றி இறந்த வர்களை மட்டும் இந்த ஆய்வில் சேர்த்துள்ளோம். இதில், நிமோனியாவினால் தான் அதிகம்பேர் இறந்துள்ளனர்.
அதற்கடுத்து இதய நோய் உள்ளிட்ட இணை நோய் ஏற்கனவே இருப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, நாங்கள் இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார்.