மணிப்பூரில் ஆம்புலன்ஸ் சைரன் இயக்க தடை

278 0

மணிப்பூரில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பீதி அடைவதைத் தடுக்க ஆம்புலன்சுகளில் சைரனை ஒலிக்கவிட வேண்டாம் என அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தாக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு முக்கிய நகரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரன் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் பொது மக்கள் பீதி அடைவதுடன் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மருத்துவ கண்காணிப்பாளர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் இயக்குவோருக்கு மணிப்பூர் மாநில மருத்துவ இயக்குநரகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், “ஆம்புலன்சுகளின் சைரன் ஒலி பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பீதியை உருவாக்குகிறது.
மேலும் இப்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகன நெரிசலும் இல்லை. எனவே, ஆம்புலன்ஸ் வாகனங்களில் சைரனை இனி ஒலிக்கவிட வேண்டாம். சாலைகள் மூடப்பட்டிருந்தாலோ அல்லது வாகன நெரிசல் இருந்தால் மட்டுமே சைரனை ஒலிக்கவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,683 ஆக அதிகரித்துள்ளது. 612 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்னுபூர், உக்ருல், தவுபால், காக்சிங் மற்றும் சூரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 8-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது வரும் 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.