இலக்கினை வெல்ல இளையவரே எழுவீர்.
***** ****
காயப்பட்டுக் கிடப்பதல்ல எங்களின் கள வரலாறு,
அதை ஆற்றிக்கொண்டு அடுத்த களத்திற்குத்
தயாராவதே நாம் கண்ட வரலாறு…!
காயங்களுக்கு மருந்தைக் கட்டுங்கள்
ஆறினாலும் அதன் அடையாளங்கள்
கொண்ட வலியை எங்களுக்கு உணர்த்தும்…!
அதன் வலி எப்போதும் இருக்கவேண்டும் என்பதற்காக
புண்ணை எவனும் ஆற்றாமல் வைத்திருக்கமாட்டான்…!
எமது விடுதலைப் போராட்டம் அதனது இலக்கை நோக்கிச் சரியாகத்தான் நகர்ந்தது…!
முள்ளிவாய்க்காலில் அது மூச்சடங்கவிலை
எதிர்பாராத முடக்கத்தோடும் அழிவோடும் மூச்சைப் பிடித்துக்கொண்டு புதிய வடிவில் பரிணாமித்தத்து..!
பரிணாமித்த அந்த அப்பாவி விடுதலைக் குழந்தையை நாங்கள் எமது கவனக்குறைவாலும்
எமது அக்கறையற்ற தன்மையாலும் அந்த விடுதலைக் குழந்தையை இன்னும்
அதிகூடிய பசியோடும் தாகத்தோடும் அலையவிட்டிருக்கிறோம்..!
இதை வளர்த்தெடுக்கும் பொறுப்பினை எங்கள் இளையவர்கள் இன்னும் அதீத
அக்கறை கொண்டு கையிலெடுத்து வலிமையூட்டத் தவறினால்
மிகப்பெரு வரலாற்றுப் பொறுப்பினை செய்யத்தவறிய பழியினைப் பெறுவோம்..!
பொறுப்புள்ள பெரியவர்கள் அவர்களுக்கு உந்துசக்தியாகவும் உறுதி
கொடுப்பவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்கவேண்டும்…!
இதை நாம் எச்சந்தர்ப்பத்திலும் எந்த சவால்களின்
ஆக்கிரமிப்பிற்கும் இடங்கொடாது தொடர்ந்தாகவேண்டும்…!
வலிகொண்ட நாங்கள்தான் அவர்களின் பயணத்திற்கு
எரிபொருளாகவும் திசைகாட்டியாகவும் இருக்கவேண்டும்…!
அதிலிருந்து விலகி நாங்கள் தவறிழைத்துவிடக் கூடாது.
எங்கள் மக்கள் பட்ட வதைகளும் வலிகளும் கொஞ்சமல்ல…
அவை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை…
அந்த மக்களின் மனோபலத்தை திட்டமிட்டுச் செயலிழக்கச் செய்கிறது சிங்கள அரசு..!
நாட்டிலுள்ள சொந்தங்கள் இராணுவச் சப்பாத்துகளால் நசுக்கப்படுகிறார்கள்…!
ஒருநாள் அவர்கள் தங்கள் வலியை வலிமையோடு எதிர்கொண்டு எழுவார்கள்…!
அதற்கு நாங்கள்தான் கொஞ்சமேனும் ஆவன செய்து கொடுக்கவேண்டும்
எம்மில் பலர் இன்னமும் ஆயிரம் ஆண்டுகள் கடந்து வெற்றி கண்ட
விடுதலைகளை உதாரணங்காட்டி இப்போது இருக்கின்ற
தலைமுறையினரின் விடுதலை வேகத்தைத் தழரப்பண்ணுகின்றார்கள்!
அன்றைய கால ஒழுங்குகள் வேறு இன்றைய கால ஒழுங்குகள் வேறு…!
அவ்வாறான விடுதலைகளும் பல ஆண்டுகளைக் கடந்துதான் வெற்றிகண்டிருக்கிறது…!
அது சாதக நிலைகளை எட்டமுடியாத காலகட்டமாக இருந்ததனாலே
அவ்வாறான கால நீடிப்புத் தேவைப்பட்டது…!
ஆனால் நாங்கள் நிற்கும் இந்தக்காலம் எல்லாம் சுலபப்பட்ட காலம்,…!
எல்லாவற்றையும் எதிர்கொள்ளச் சாதகமான காலம் மட்டுமல்ல
சரியான அணுகுமுறையின் பாதைகள் செம்மைப்படுத்தப்பட்ட காலம்…..!
அந்தக் காலத்தை உதாசீனம் செய்யாமல் வேகமாகவும் ஒன்றிணைவோடும்
பயணித்தால் குறுகிய காலத்தில் எமது விடுதலையைக் கண்டடையலாம்…!
வலி சுமந்தவர்கள் உயிரோடு இருக்கும்போதே அந்த விடுதலையைப் பெற்று
அவர்களுக்குச் சமர்ப்பணமாக்குவதே கனவுகளோடு போராடி வீரகாவியமான
மாவீர்ர்களுக்கும் ஆக்கிரமிப்புக் கொடுமைக்குள் அகப்பட்டு மடிந்த மக்களுக்கும்
நாம் செய்கின்ற பெரும் சத்திய நிறைவேற்றலாகவும் இருக்கும்….!
பூகோள அரசியல் போட்டி மையம் கொண்டுள்ள இக்கால மாற்றத்தில்
அதைச் சாதகமாகப் பயன்படுத்தி நாமும் எமது உரிமைகளைப்
பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்…!
புலம்பெயர்ந்த எல்லா நாடுகளிலும் உள்ள அரசியல் கட்சிகள்
தங்கள் நலன்களுக்காக எம்மைப் பயன்படுத்துகின்ற வேளையில்
நாங்களும் எமது நலனுக்காக அவர்களைப் பயன்படுத்தவேண்டும்…!
புதிய அரசியல் நீரோட்டத்தில் இளைஞர்கள் இன்னுமாய் ஆர்வம்
கொண்டெழுந்து செயல்படவேண்டும்….!
சமாதான முன்னெடுப்புகள் தோல்விகண்டு முடங்கும் நிலை வந்தபோது
இலங்கை அரசின் அத்துமீறிய போர் நடவடிக்கையை சர்வதேசம் கண்டிக்காது
தட்டிக்கொடுத்த வேளையில் எதிர்காலத்தில் எமது மக்களும்
போராளிகளும் வாய்திறக்கமுடியாத இன்றைய நிலையைத்
தலைவர் தீர்க்கதரிசனமாக உணர்ந்திருக்கிறார்….!
அதனால்தான் மிகவும் தியாகம் நிறைந்த பொறுப்புமிக்க
போராட்டத்தைப் புலம்பெயர் இளையவர்களிடம் வெளிப்படையாகவே கையளித்தார்…!
இதைப் புலம்பெயர்ந்த ஒவ்வொரு தலைமுறை இளையவர்களும் நன்கு உணரவேண்டும்.
-வன்னியூர் குருஸ்-