முள்ளிவாய்க்கால் முடிவாகிடாது.
*******
முள்ளிவாய்க்கால் விடி வெள்ளிவாய்க்காமல்
இருண்டு கிடக்கிறது…!
ஆர்ப்பரித்த கடலும்
அலைமடிந்து கிடக்கிறது…!
கடல் முற்றக்கரை
இரத்தக்கறை படிந்து
சிதைவடைந்து கிடக்கிறது…!
காற்றலையில் கந்தகம்
மூச்சடைத்து பேச்சிழக்க
பொட்டல் வெளி காடுகளில்
புழுதி மணல் வெளியில் பொசுங்கிப்புழுவானோம்..!
கேட்பார் யாரும்மில்லை
புத்தனின் போதனையில்
புலால் மறுப்பில்லை…!
இரத்தமும் சதையுமாய் வெட்டுண்ட உடல்களாய் சிதறிக்கிடத்தது தேசம் .
நினைத்தால் நெஞ்சடைக்கிறது நினைவில் உயிர் கொதிக்கிறது
அலறல் காதடைக்கிறது
இன்று அழுகிறது
ஈழத்திரு மண்…!
கண்டவர் கதைத்தவர்
கண்முன் நின்றவர்
மெய்யோ பொய்யோ
என சொல்லும்முன்னே தறியுண்ட பிணங்களாய் தலைபோன முடங்களாய்
ஐயோ… !
சிதறிய உடலங்கள் எத்தனை எத்தனை
ஊன் உணவில்லை உடுதுணியில்லை
உமிழ் நீர் சுரக்க
உடலில் ஊன் இல்லை
மருத்துவ மனையெல்லாம் செல்லுக்கிரை…!
கோவில் குளங்கள் மடமெல்லாம் கிபீர் குண்டுக்கிரை…
பள்ளிகளில் புகுந்தோர்க்கு அங்கே வினை
பதுங்கு குழிகளில்
பாம்பு பூர
நஞ்சு விசம் கொன்றதுபோல் கருணையே இல்லாமல்
காற்றில் விசம் கலந்தார்….!
தமிழர் எம் குடிகளை
கருக்கி மனம்
குளிர்ந்தார் …
சத்திய வேள்விதனில்
இன்னுயிர் தந்தோம்
வெற்றியோ தோல்வியெனில் இலட்சியம்வென்றோம்
ஒற்றையாய் நின்றும் எம் மானத்தை காத்தோம்
சத்தியம் வெல்லும் என்றே யாவையும் நாம் இழந்தோம்
உலகமே…!
எம்மையேன் ஏய்த்தது
சதி என்னும் வலை
பின்னிப்போட்டது…
எம் நிழலையே தீயிட்டு எரித்தது எம் அடிக்கொடி
அனைத்தையும் அழித்தது
அறம் வெல்லும் என்பது பொய்யாச்சு…!
பரத்தையர் உலகம் என்றாச்சு பரிதாபம் எங்களின் நிலையாச்சு..!
கடந்து விட்டு போ
என்கிறது உலகம்…!
மறந்துவிட்டால் இல்லை தமிழர்க்கு மானம்…! இழந்துவிட்டவைகள்
வெறும் உயிர் அல்ல
எம் இலட்சியக்கனவின்
சத்திய நீரோட்டம்…!
அது உயிர்க்கும் மறுபடி
தாய் மண்ணை மீட்டு வரும்படி …!
அக்கினி குழம்பள்ளித் தெளித்தாலும்…
ஆகாயம் இடிந்திங்கு
வீழ்ந்தாலும்…
அடையாமல் விடோம்
தமிழர் எம் தாகத்தை..!
அணையாமல் விடோம்
எஞ்சி ஒரு தமிழன்
இருக்கும்வரை
அஞ்சி அடிபணியோம்.. அக்கினிக் குஞ்சுகளாய்
மீண்டும் பிறப்பெடுப்போம் இலட்சியத் தீயினை
சுமந்தே வழிநடப்போம்…!
முள்ளிவாய்க்கால்
முற்றுப்பெறாத முற்றம்…!
ஒவ்வொரு முறையும் முகிழ்ப்பெடுக்கும்
கல்லையும் கரைத்து
கணியம் சமைக்கும்…!
என்றோ ஒருநாள்
எம்விடியல் பிறக்கும்
வெல்வோம் வெல்வோம் தமிழ்ஈழம் வெல்வோம்.
முள்ளிவாய்க்கால் கடந்த
வலியோடு,
அவுஸ்திரேலியாவிலிருந்து
வானிலன்.