முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2021 செவ்வாய்க் கிழமை ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்று முன்றலில் பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 5மணி வரை நடைபெற்றது.இந் நிகழ்வில் தமிழீழ மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் ஆர்மேனிய மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு எங்கள் கோரிக்கைக்கு வலுச்சேர்த்து இருந்தனர்.
பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.சிறீலங்கா அரசினால் தொடர்ந்து நடாத்தப் பட்டு வருகின்ற தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்தி நீதியைப் பெற்றுத் தரவும் அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரக்கோரியும் கோரிக்கை உள்ளடங்கிய மனு ஐரோப்பியப் பாராளுமன்று தலைவருக்கு கையளிக்கப்பட்டது.
தற்போதய நிலைமையில் சிங்களப் பேரினவாத அரசின் அடக்கு முறைக்குள்ளும் தமிழீழத்தில் மக்கள் எழுச்சிகொண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவு கூர்ந்துள்ளனர்.
இப்படிப் பட்ட சூழ் நிலையில் தொடர்ந்தும்
தமிழினப் படுகொலைக்கு அனைத்துல குற்றவியல் நீதி மன்றில் சிறீ லங்கா சிங்களப் பேரினவாத அரசைப் பாரப்படுத்தித் தமிழீழ மக்களுக்கு நீதியை பெற்றுத் தரவும், தொடர்ந்து அழிக்கப் பட்டுக்கொண்டு இருக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதினை வலியுறுத்தியும் புலம் பெயர்தமிழ் மக்களும், தமிழீழ மக்களும், தமிழக மக்களும் ஒன்றிணைந்து போராடினால் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் என அறை கூவல் விடப்பட்டது. இறுதியாகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும்எழுச்சிக் குரலுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.