முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் மாநில அவை(Landtag) முன்றலில் 18.05.2020 நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்விலே பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சிங்கள பௌத்த பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும்,தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களிற்கும் சுடர்வணக்கம் மலர்வணக்கம் செய்தனர்.
சீரற்ற காலநிலையிலும் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமைக்கு மத்தியிலும் யேர்மனிய அரச சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய சமூக இடைவெளியை பேணியவாறு இந்நிகழ்வு நடந்தேறியது.
நிகழ்வில்..
பொதுச்சுடரினை வியர்சென் நகர இடதுசாரி கட்சியின் பேச்சாளர் திரு. Simon Männersdörfer அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வட மாநில பொறுப்பாளர் திரு நடராஜா திருச்செல்வம் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை கப்டன் இசைவாணன் அவர்களின் சகோதரர் திரு.குணரத்தினம் திருச்செல்வம் அவர்கள் ஏற்றி வைக்க மலர்மாலையை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்தியமாநிலபொறுப்பாளர். திரு. சின்னையா நாகேஸ்வரன் அவர்கள் அணிவித்தார்.
மேலும் கவி வணக்கம், இசை வணக்கம், நடனம், ஆகிய நிகழ்வுகளுடன் சிறப்புரைகளும் இடம்பெற்றன. இடதுசாரிக் கட்சிகயை சேர்ந்த 3 உறுப்பினர்களுடன் குர்திஷ் அமைப்பின் பெண்மணி ஒருவரும் உரையாற்றியிருந்தார். இந்நிகழ்விலே தமிழ் இளையோர் அமைப்பின் துணை பொறுப்பாளர் செல்வன் மதுரா அவர்கள் ஜெர்மன் மொழியில் ஆற்றிய உரையானது அனைவரையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.