சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

1328 0

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை மண்டியிடாது போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான கவனயீர்ப்பு நிகழ்வானது 18.05.2021 செவ்வாய் அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள ர்நடஎநவiயிடயவண திடலில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

கொரோனாத் தொற்றானது உலகப்பேரிடராக மாறிநிற்கும் இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் பல நூற்றுக்கணக்கில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்பெற்ற இக் கவனயீர்ப்பு நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழின அழிப்பு நாளினை முன்னிட்டு அனைத்துலகத் தொடர்பக வெளியீட்டுப்பிரிவினால் சிறப்பு வெளியீடாக அனல் வீசிய கரையோரம் இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. இனஅழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரங்களும் வேற்றினத்தவர்களுக்கு இளையோர்களால் வழங்கப்பட்டதுடன் இனஅழிப்பு சார்ந்தும் தெளிவாகவும், விரிவாகவும் விளங்கப்படுத்தப்பட்டது. இளையோர்களால் வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஜேர்மன், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில்; பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தன.

சுவிஸ் வாழ் மனிதநேயச் செயற்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஈருருளிப்பயணமானது 14 மாநிலங்களுக்கூடாக சுமார் 700 கிலோமீற்றர் பயணித்து அந்தந்த மாநில மாநகரசபை உத்தியோகத்தர்களிடம் தமிழின அழிப்பு சார் ஆவணங்கள் அடங்கிய மனுக்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று பேர்ண் மாநிலத்திலும் இனஉணர்வாளர்களினால் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பினை தெரியப்படுத்தும் நோக்கிலான நடைப்பயணமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழின உணர்வாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகளின் நோக்கமானது மாநில ரீதியிலாக வேற்றின மக்களைச் சென்றடைந்தததோடு, சுவிஸ் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளமையும் சிறப்பான அம்சமாகும்.

நிகழ்வில் தமிழின அழிப்பு சார்ந்த, தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் வகையிலான பதாதைகளைத் தாங்கிய சுவிஸ் வாழ் தமிழ்மக்கள்; தமது உணர்வுகளை ஆற்றாமையோடு வெளிப்படுத்தியதோடு நாம் அனைவரும் ஒற்றுமையாக தாயகம் நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதிமொழியுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் வலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமை மீட்போம்! என்ற உணர்வுடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.