மதுரை ஆவினில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக அதிகாரிகளிடம் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரடி விசாரணை செய்தார்.
மதுரை ஆவின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை நெய், வெண்ணெய், உற்பத்தியில் 13.71 கோடி முறைகேடு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக உதவி மேலாளர்கள் கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன், துணை மேலாளர் வனிதா, விரிவாக்க அலுவலர் மாயக்கண்ணன் ஆகிய 5 பேரை ஆவின் இயக்குனர் சஸ்பெண்ட் செய்தார்.
இதனைத் தொடர்ந்து விசாரணை அதிகாரி இரணியன் முறைகேடு தொடர்பாக முன்னாள் பொது மேலாளர் பெண் அதிகாரி உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திடீரென அமைச்சர் மூர்த்தி ஆவினுக்கு சென்று பொது மேலாளர் கருணாகரன் மற்றும் அதிகாரிகளை தனித்தனியாக அழைத்து முறைகேடு தொடர்பாக விசாரித்தார்.
அப்போது பெண் அதிகாரியின் நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாகவும் அது தொடர்பாக விசாரணை அதிகாரி பக்கத்து அறையில் விசாரிப்பதாக கூறினர். இதனைத் தொடர்ந்து விசாரணை அதிகாரியிடம் விசாரணை நிலை மற்றும் தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தமிழக முதல்வருக்கு அனுப்பி வையுங்கள். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனிமேல் யாரும் தவறு செய்யாமல் பணியாற்ற வேண்டும் என அங்குள்ள அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் அமைச்சர் மூர்த்தி கேட்டுக்கொண்டார்.
அமைச்சரின் இந்த அதிரடி வருகை ஆவின் அதிகாரிகளிடம் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.