முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி குழுமம் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

204 0

கொரோனா தொற்றை எதிர்த்து போராட தாராளமாக நிதி வழங்கலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்ட நிலையில் ஆச்சி குழுமம் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட தாராளமாக நிதி வழங்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி சாதாரண குடிமகன்கள், சினிமா பிரபலங்கள், தொழில் நிறுவன தொழில் அதிபர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், கட்சிகள் என முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஆச்சி குழுமம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. ஆச்சி குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.டி. பத்மசிங் ஐசக் நேற்று தங்களுடைய பங்களிப்பான ஒரு கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரடியாக வழங்கினார். நிதி வழங்கும்போது சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
அப்போது பத்மசிங் ஐசக் உடன் ஆச்சி குழுமத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் அவருடைய இரு மகன்கள் அஸ்வின் பாண்டியன், அபிஷேக் அபிரகாம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
நிதியுதவி வழங்கிய பத்மசிங் ஐசக் ‘‘இது எங்களுடைய தரப்பிலிருந்து ஒரு சிறிய பங்களிப்பு மட்டுமே. மேலும் இந்த தொற்று நோயை ஒன்றிணைந்து எதிர்த்து போராடும் அனைத்து அமைச்சர்கள், மருத்துவ அதிகாரிகள், காவல் துறையினர், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. தமிழக அரசு கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. அவர்களின் அனைத்து முயற்சிகளும் பாராட்டுதலுக்குரியது’’ என்றார்.