கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பில் பிறப்பில் மட்டுமல்ல, இறப்பிலும் இணைந்த இரட்டை சகோதரர்கள்

272 0

ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்து வாழ்ந்து ஒன்றாக மரணம் அடைந்த சகோதரர்களின் இழப்பு அவர்களின் பெற்றோரை மட்டுமல்ல, மீரட் நகரையே துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி பல குடும்பங்களை மீளாத்துயரில் ஆழ்த்தி வருகிறது.

இப்படி ஒரு சோக நிகழ்வுதான், உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் நடந்திருக்கிறது.

இங்கு 3 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து பிறந்தவர்கள் இரட்டை சகோதரர்கள், ஜோபிரெட் வர்க்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரெட் ஜார்ஜ் கிரிகோரி.

இருவரும் ஒன்றாய் பிறந்தார்கள். வளர்ந்தார்கள். படித்தார்கள். என்ஜினீயர் ஆனார்கள். கடந்த மாதம் 23-ந்தேதி இந்த சகோதரர்கள் தங்கள் 24-வது பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள்.

ஆனால் கடந்த 1-ந்தேதி இருவரையும் பாழாய்ப்போன கொரோனா தாக்கியது. அவர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இருவருக்கும் 10-ந்தேதி கொரோனா ‘நெகடிவ்’ என வந்து விட்டது.

இரட்டை சகோதரர்கள்

இந்த நேரத்தில் கடந்த 13-ந்தேதி இரவு 11 மணிக்கு ஜோபிரெட் வர்க்கீஸ் கிரிகோரி இறந்து விட்டார்.

ஜோபிரெட் இறந்த அதே ஆஸ்பத்திரியில் அவரது சகோதரர் ரால்பிரெட் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

ஆனால் மறுநாள் பொழுது விடியவும், அவரது வாழ்வும் முடிந்தது. அவரும் இறந்து விட்டார்.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றி வந்த இரட்டை சகோதரர்கள் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், பிந்தைய பாதிப்பாக வந்த நுரையீரல் தொற்றால் பலியாகி இருப்பது அந்தக் குடும்பத்தையே தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதுபற்றி கிரிகோரி ரபேல் கூறும்போது, “ஜோபிரெட்டும், ரால்பிரெட்டும் எங்களுக்காக நிறைய திட்டங்களை வைத்திருந்தார்கள். எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத்தர அவர்கள் விரும்பினார்கள். நானும், என் மனைவியும் ஆசிரியர்களாக இருந்து, அவர்களை வளர்த்து ஆளாக்க போராடினோம். இதற்கு பிரதியுபகாரமாக அந்தப் பிள்ளைகள் எங்களுக்கு பணம் முதல் சந்தோஷம் வரை எல்லாவற்றையும் திருப்பித்தர ஆசைப்பட்டார்கள். கொரியா, ஜெர்மனி என வெளிநாடுகளுக்கு வேலைக்கு போகவும் ஆசைப்பட்டார்கள். கடவுள் ஏன் அவர்களை எங்களிடம் இருந்து பிரித்து இப்படி தண்டித்தார் என்பதே தெரியவில்லை” என்று சொல்லி அழுவது கல் நெஞ்சையும் கரைய வைக்கும்.

ஒன்றாய்ப்பிறந்து வளர்ந்து வாழ்ந்து ஒன்றாக மரணம் அடைந்த சகோதரர்களின் இழப்பு அவர்களின் பெற்றோரை மட்டுமல்ல, மீரட் நகரையே துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.