தடுப்பூசி போட்டுக்கொண்டால், முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம், இனி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாது என நினைத்து கொண்டிருந்த வேளையில், ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும், கொரோனாவால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டால், முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம், இனி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாது என நினைத்து கொண்டிருந்த வேளையில், ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும், கொரோனாவால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், காவல்துறையினர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் மீண்டும் கொரோனாவின் பிடியில் சிக்கினர். 2 தவணை தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் மிக குறைந்த அளவில்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மிதமான பாதிப்பு தான் ஏற்படும். உயிர் பாதிப்பு ஏற்படாது.
தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான், மிதமான கொரோனா பாதிப்புடன் உயிர் தப்பி கொள்ள முடிகிறது.
தடுப்பூசி போட்ட பிறகும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது மிகமிக முக்கியம். அதை எப்போதும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டோம் என இவற்றை கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டால், மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.