நாயாறுக் கிராமத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட தமிழ் மக்கள்!

640 0

தமிழ்மக்களின் பூர்வீக கடற்கரைக் கிராமமான நாயாறு முற்றுமுழுதாக சிங்க மயமாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசமான செம்மலை கிழக்கு பிரதேசசபையைச் சேர்ந்த பகுதியென முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

naayaaru 3

தமிழ் மக்களின் பூர்வீக நிலமான முகத்துவாரத்தில் ஆரம்பித்த சிங்களக் குடியேற்றம் தற்போது நாயாறை முற்றுமுழுதாக ஆக்கிரமித்துள்ளது. இங்கே, தற்போது 299 சிங்களக் குடும்பங்களைக் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்துக்கு இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இங்கே கிராம அலுவலர்களோ, கிராம மக்களோ செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா அரசாங்கத்தின் மீன்பிடித்துறை அமைச்சானது தமிழ் மீனவர்கள் தமது சொந்தக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்காது, தற்போது சிங்கள மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளித்து வருகின்றது என முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடிச் சங்கத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் தமிழ் மீனவர்களுக்கென அமைக்கப்பட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினை 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

1983ஆம் ஆண்டு சிங்கள அரசினால் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்கமைவாக உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களால் நாயாறுப் பிரதேச மக்கள் முற்றுமுழுதாக விரட்டியடிக்கப்பட்டனர்.

.இதன்பின்னர், 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கைப்பற்றியபின்னர் நாயாறுப் பிரதேச தமிழ்மக்கள் சிங்கள மீனவர்களால் முற்றுமுழுதாக விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இப்பிரதேசம் இராணுவத்தினரின் கண்காணிப்பில் இருப்பதுடன், அங்கே தமிழ் மக்களோ, கிராம அலுவலரோ அல்லது சிவில் அமைப்பின் பிரதிநிதிகளோ செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் கொழும்பு மீனவர் சங்கத்தின் தலைவர் கிறிஸ்ரி லால் பெர்னான்டோ ஆகியோர் தமிழ் மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

naayaaru2 naayaaru1