முட்கம்பிப் பொறிக்குள் தமிழினம் ! அகரப்பாவலன்

487 0

முட்கம்பிப் பொறிக்குள் தமிழினம் !

தேடலின் விழிகள்
நிரம்பி வழிந்தன …
எதை ? யாரை ?
விடை காணமுடியாத கணப்பொழுது !
வட்டுவாகல் பாலம்
தமிழரின் வலிகளை சுமந்தபடி
வழியனுப்பிக்கொண்டிருந்தது …!
மண்மூடி பூத்தூவமுடியாமல் போன
உறவுகளின் துயரம் …!
புயலடித்த பூமியில் தொலைத்த
உறவுகளின் ஏக்கம் …!
இவர்களுக்காய் காத்திருந்தது
முட்கம்பி திறந்த வெளிச் சிறைச்சாலை …

முள்ளிவாய்க்கால் !
ஊழித்தாண்டவமாடிய அடையாளத்தை
பிரதிபலித்த நேரம் …
குருதிச் சகதிக்குள்
நம் மக்களின் பிணக்குவியலில்
புழுக்களும் காக்கைகளும்
விருந்துண்ட நேரம் …

கொட்டித் தீர்த்த தீ மழையில் தப்பிய
எமது மக்கள் அனைத்தையும் இழந்து
நடைப்பிணமாக நின்ற நேரம் …

வரிசை கட்டி நின்றிருக்கிறோம் …

மாவீரரை வணங்க …
தலைவனைக் காண …
போருக்குச் செல்ல …
வெற்றிமாலை சூட …

அன்றும் நின்றோம் … நீள்வரிசையில் …
நெஞ்சம் பிளந்து …இதயம் பிழிந்து
அச்சம் நிறைந்து …சாவை உணர்ந்து …
பல குண்டுகளைத்தாண்டி
உயிர்காத்து நின்ற வரிசை …

வரிசை நகர்கிறது ……
என்ன நடக்கப்போகிறது ?
எதை இழக்கப்போகிறோம் ?
உயிருக்கு என்ன உத்தரவாதம் ?
நினைவலைகளில் ஏக்கத்தின் காட்சிகள் …

பேருந்து வருகிறது … !
கனரக வாகனம் வருகிறது …!
ஆயுதம் ஏந்திய இனவெறிச் சிப்பாய்கள்
திமிருடன் துள்ளிக்குதித்து வருகிறார்கள் …
தூக்குக்கயிற்றில் நிற்கும் மனிதரின்
மனஉணர்வில் மக்கள் ….

குழந்தைகளும் …முதியோரும் …
பெண்களும் …இளைஞரும் …
தாய்மாரும் …தந்தையரும் …
அடிவயிறில் நெருப்பை
ஏந்தியபடி நிற்கிறார்கள் …

வரிசை நகர …நகர ..
மாம்பழங்களை வகை பிரிப்பது போல்
வயது …இளமை …முதுமை …குடும்பம் … – என
வகையாய் பிரித்து ஏற்றுமதி செய்தனர் …!

சரணடைந்த போராளிகள்
இனம் காணப்பட்டு …
உறவுகள் துடி துடிக்க …
உண்மைகள் மூடி மறைக்க …
அறத்தின் வேரறுத்து பிரித்துச் சென்றனர் …

யாரைக் கேட்பது ? யாரிடம் முறையிடுவது ?
பாரின் விழிகள் மூடிய நேரமது …!
போரை நடத்திய வல்லரசுப் பேய்கள்
ஊரைக் கூட்டி கொண்டாடிய நேரம் …!

முட்கம்பி வேலிக்குள் ….

ஏக்கம் நிறைந்த கண்கள் !
ஆக்கம் இழந்த கைகள் !
தேக்கம் நிறைந்த வாழ்வு !
தூக்கம் தொலைத்த விழிகள் !

கேள்விக் குறிகள் மிச்சம் !
வாழ்வின் வலிகள் எச்சம் !
மரண பயத்தின் அச்சம் !
தேடல் மனதின் உச்சம் !

தொலைத்ததை …இழந்ததை
இன்னும் தேடுகிறது தமிழினம் …
மூடிய விடைகள் அவிழ்க்கப்படும் … – சிங்களம்
ஆடிய கொடுமைகள் திறக்கப்படும் .

-அகரப்பாவலன்-