நாளை 18ம் திகதி கிழக்கு மாகாண மக்களும் உணர்வுப் பூர்வமாக தமது வீடுகளில் விளக்கேற்றி முள்ளிவாய்க்காலில் கடந்த 2009,மே,18,ல் ஆகுதியான மக்களை நினைவு கூருவோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை்தமிழரசு கட்சித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்
முள்ளிவாய்க்கால் 12வது ஆண்டு நினைவு தொடர்பாக மேலும் ஊடகங்களுக்குக் கருத்து கூறுகையில்,
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த இலட்சக்கணக்கான மக்களின் நினைவுகூரும் தினம் மே.18ம் திகதியாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இக்கட்டான காலங்களில் எல்லாம் முள்ளி வாய்க்கால் நினைவு வணக்கத்தை 2010, மே,18ம் திகதி தொடக்கம் ஒவ்வொரு வருடங்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினராகிய நாம் உணர்வுப்பூர்வமாக ஆலயங்களில் பூசை வழிபாடுகளுடனும், கத்தோலிக்க தேவாலயத்தில் ஆராதனை வணக்கத்துடனும் தொடர்ச்சியாகச் செய்து வந்தமை யாவரும் அறிந்த ஒன்றே.
இந்தவருடமும் அதே போல் தற்போதைய கோவிட் நோய் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பேணி நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கான சில ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.
இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எமது உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாலிபர் அணித் தலைவர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள் என 22,பேருக்கு நீதவான் நீதிமன்றங்கள் மூலமாகத் தடை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவுகளை மதித்தும், தற்போதைய கோவிட் நோய் தாக்கத்தைக் கருத்தில் கொண்டும் நாளை மே18, ம் திகதி மாலை 6, மணிக்கு அல்லது பொருத்தமான ஒரு நேரத்தில் அனைவரும் இல்லங்கள் தோறும் விளக்கேற்றி உயிர்நீத்த உறவுகளை நினைந்து இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்துமாறு வேண்டுகின்றோம்.
2010,ம் ஆண்டு வடகிழக்கில் முதலாம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடத்த முடியாத மிகவும் பயங்கர அச்சுறுத்தல் நிலவியபோது மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வர ஆலயத்திலும், மட்டக்களப்பு மாமாங்கேஷ்வர ஆலயத்திலும் மிகவும் உணர்வுப்பூர்வமாக முள்ளி வாய்க்கால் நினைவு வணக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.