நாடளாவிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும்; அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என எச்சரித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா அவசியமான சூழ்நிலைகளில் மாத்திரம் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியே செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் 31ம் திகதி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் இரவு 11 முதல் அதிகாலை நான்கு மணிவரை நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ள அவர் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடைகள் வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தாலும் உரிமையாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் இயங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரங்கள் மிகவும் முக்கியமானவை இதன் காரணமாக மக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை துஸ்பிரயோகம் செய்யவேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.