பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை எந்தவிதமான தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்கும் பொறிமுறைக்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு கிடைப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மொத்த விற்பனை வர்த்தகர்களுக்கு புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தைக்கு வருவதற்கும் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான அனுமதிப் பத்திரத்தை வழங்கி பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையை தடையின்றி செயல்படுவதற்கும் புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை மற்றும் மாவட்ட செயலகங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதற்கமைவாக நேற்று மொத்த விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்ததாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
மொத்த விற்பனைக்காக புறக்கோட்டையின் 4ம், 5ம் குறுக்குத் தெருக்கள் இன்று திறக்கப்பட்ட நிலையில் அதனை கண்காணிக்கச் சென்ற வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான இக்கட்டான நிலையில் பொருட்களின் விலையை அதிகரிக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வர்த்தக சங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய தற்போதைய பொருட்களின் விலை அமுலில் இருக்கும் எனவும் வர்த்தகத்துறை அமைச்சர் கூறினார்.