பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞரை விடுவிக்க அழுத்தம்

430 0

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஓராண்டாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

கொடூரமான அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்பட வேண்டும் என்று 13 பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

அவர் எழுதிய `நவரசம்` என்ற கவிதைத் தொகுப்பில் `தீவிரவாத` விஷயங்கள் இருந்தன, அதன் மூலம் அவரது மாணவர்கள் `தீவிரவாத சிந்தனைக்கு` தூண்டப்பட்டனர் என்று அரச தரப்பு கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று ஜேடிஎஸ், அம்னெஸ்டி, ஐடிஜேபி உள்ளிட்ட அந்த 13 அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

அவர் மீது தவறு இருப்பதாக அரசு கருதுமாயின் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி சர்வதேச நியமங்களுக்கு அமைய நியாயமான வழக்கு விசாரணையை முன்னெடுக்க வேண்டும், அப்படிச் செய்யும் போது அவர் தன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

“மிகவும் பிழையான பயங்கரவாத தடைச் சட்டத்தை“ இலங்கை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அந்த அமைப்புகள், அதன் மூலம் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று அந்த 13 அமைப்புகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

அஹ்னாஃப் ஜஸீமின் `நவரசம்` கவிதை தொகுப்பு ஒரு போதும் இலங்கையில் தடை செய்யப்படவில்லை, மேலும் நாட்டின் தேசிய நூலகப் பட்டியலிலும் அது இடம்பெற்றுள்ளது.

தனது படைப்பு `தீவிரவாத சித்தாந்தங்களை` தூண்டுகிறது என்று கூறும் அரசின் கருத்தை அஹ்னாஃபும் இதர முன்னணி தமிழ் அறிஞர்களும் மறுக்கின்றனர்.

இலங்கையில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து புறக்கணிப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதன் பின்னணியில் அவரது கைது வந்துள்ளது என்று அவரது விடுதலையைக் கோரும் கூட்டு அறிக்கை ஒன்றில் அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

அவர் `போலியான வாக்குமூலம்` ஒன்றை அளிக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுவதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது ஒரு பாடசாலையில் அவர் எழுதிய `நவரசம்` புத்தகம் கண்டெடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அவர் கைது செய்து பத்து மாதங்கள் வரை சட்டத்தரணியைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

உறவினர்கள் கூட அவரை ஐந்து மாதங்களுக்கு பிறகே காண முடிந்தது. இவையெல்லாம் அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என்று 13 மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அந்தக் கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா மற்றும் உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் பயங்கரவாத தடை சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரினாலும், தொடர்ச்சியாக வந்த அரசுகள் அந்த கோரிக்கையை புறந்தள்ளின.

அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவரை 18 மாதங்கள் வரை குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யாமலும், நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிறுத்தாமலும் வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது