குவிந்தது தமிழினம் இனவெறிக் கருஞ்சுழிக்குள் !
————————————————————-
பாலாறு ஓடிய வன்னிமண்ணில்
நெருப்பாறு ஓடிய நேரம் …
வரலாற்றுப் பதிவில் இது
இனவெறிக் கோரம் …
ஒளிசிந்தி வன்னிமண்ணில் பூத்தது
நட்சத்திரக் கூட்டங்களல்ல …
வலிதந்து வதைக்கப் பாய்ந்த
எரிகுண்டுக் கூட்டங்கள் …
சுற்றிவளைத்து வன்னியை
உருக்குலைத்த நேரம் …
பற்றிய தீயினில் தமிழர்கள்
கருகி வெந்த நேரம் …
வல்லரசுப் பலங்களின் ஆயுதங்களை
எல்லையில்லாமல் பொழிந்த நேரம் … – தமிழர்கள்
எல்லை இழந்து சிதறி ஓடிய நேரம் …
பொல்லாப் பொறிக்குள் சிக்கிய நேரம் …
அப்பொழுதுதான் … அது நிகழ்ந்தது !
மலையில் பிறந்த நதி கடலைச் சேரும் – கொடும்
அலையில் அமிழ்ந்த தமிழர் எங்கு சேர்வார் ?
உலையில் கொதிக்கும் நீர் ஆவியாகும் ! – தீ
நிலையில் விழ்ந்த தமிழர் எங்கு போவார் ?
சிங்களம் வைத்த பொறியே …
அந்தத் திடலின் வெளி …!
வா … வா …என அழைத்தே
வானில் பொழிந்தது …
வருவோரை வருத்தியே
உயிரை பறித்தது …!
வட்டுவாகல் பாலத்திற்கும்
முள்ளிவாய்க்கால் பொதுமண்டப
இடைப்பட்ட திடலின் வெளியில் …
இனஅழிப்பின் பேரடையாளமாக
குவிந்தது தமிழினம் …. !
தமிழீழ தேசவிடுதலைக்காய் உழைத்த
தமிழீழ தேச உணர்வுக் கரங்கள் குவிந்தன !
அதுவே இறுதித் தரிப்பிடமாய் பதிவாகியது …
அதுவே பலரின் முடிவுரையின் முற்றுப்புள்ளியாகியது …
வெறிச்சோடிய கண்கள் ! நினைவிழந்த நெஞ்சங்கள் !
துன்பம் தாண்டிய தேடல்கள் ! இழப்பை மீறிய எதிர்பார்ப்புக்கள் !
அவலம் தாங்கிய உரங்கள் ! விழுப்புண் எய்திய உடல்கள் !
கண்களில் வழியும் நீர்வீழ்ச்சி ! அதை உணர முடியா மனவீழ்ச்சி !
அழும் குழந்தையின் குரலோசை ! அதை ஆற்றமுடியா மனவோசை !
எழும் நிலைகளை புரியாத ….மனம் மரத்த நேரங்கள் !…
முட்கம்பி வேலிக்குள் சிக்கப்போவதும் ….
முகவரி இழந்து அழியப் போவதும் ….
காணாமல் போவோர் வரிசையில் சேர்வதும் …
கதறித் துடித்தே சாகப் போவதும் …
புரிந்தும் …புரியாமலும் … அறிந்தும் …அறியாமலும்
எரிந்த மனதுடன் காத்துக் கிடந்தனர் தமிழர் !
இன்னும் காத்துக் கிடக்கிறார் தமிழர் !
காணாமல் போனவரை தேடி .
-அகரப்பாவலன்-