இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாலஸ்தீன அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு

241 0

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியாக மேற்கு கரை உள்ளது. இப்பகுதியின் அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலையடுத்து காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்த மோதலில் இருதரப்பிலும் இதுவரை மொத்தம் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியான மேற்கு கரையில் போராட்டம் நடைபெற்றது.

மேற்கு கரையில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். காசா பகுதியில் நடைபெற்று வரும் மோதல் மேற்கு கரை பகுதிக்கும் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பதற்றத்தைத் தணிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜோ பைடன் இருதரப்பும் அமைதியை கடைபிடிக்கும் படி கூறினார்.

காசா முனை பகுதியில் அசோசியேட் பிரஸ், அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்திருந்த கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

அமைதியை ஏற்படுத்த இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் ஜோ பைடன் பேசுவது இதுவே முதல்முறையாகும்.