போலி ரெம்டெசிவிர் ஊசி போட்டும் உயிர் தப்பிய கொரோனா நோயாளிகள்

364 0

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் சிக்கியவர்கள் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்காக தவம் கிடக்கின்றனர். அந்த அளவுக்கு இந்த ஊசி மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் சிக்கியவர்கள் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்காக தவம் கிடக்கின்றனர். அந்த அளவுக்கு இந்த ஊசி மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.

மிதமான மற்றும் தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு இந்த ஊசியை செலுத்துகிறபோது, அவர்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய நாட்கள் குறைகின்றன. இது இறப்புவிகிதத்தை குறைக்கிறது, இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படாத உண்மை.

இதை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சொல்லி இருக்கிறது.

இந்த நிலையில், முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற மத்தியபிரதேச மாநிலத்தில் பல டாக்டர்களும் இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு எழுதித்தர ஆரம்பித்தனர். இதனால் எல்லோரும் கையில் டாக்டர் சீட்டுகளுடன் ரெம்டெசிவிர் ஊசி மருந்து வாங்க ஓடினார்கள். இதனால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதைப்பயன்படுத்தி அந்த மாநிலத்தில் குஜராத்தை சேர்ந்த ஒரு கும்பல், போலி ரெம்டெசிவிர் மருந்தை சப்ளை செய்துள்ளது. இது தெரியாமல் வாங்கி நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இந்த போலி ஊசியை செலுத்தியும் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 1-ந் தேதி போலி ரெம்டெசிவிர் மருந்தை சப்ளை செய்த கும்பல் எப்படியோ போலீஸ் பிடியில் சிக்கியது.

அந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் இந்தூரில் 700 வியால் போலி ஊசி மருந்தும், ஜபல்பூரில் 500 வியால் போலி ஊசி மருந்தும் விற்றது தெரிய வந்தது. மும்பையில் இருந்து காலியான வியால் (புட்டி) வாங்கி, குஜராத்தின் வாபி பகுதியில் உள்ள ஆலையில் வைத்து குளுக்கோஸ் சால்ட் கலவையை நிரப்பி, போலி லேபிள்களை ஒட்டியதும் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. இந்தூரில் இந்த ஊசியை போட்டுக்கொண்டு 10 நோயாளிகள் மரணம் அடைந்தனர். ஆனால் 90 சதவீத நோயாளிகள் உயிர் தப்பி உள்ளனர். இதில் என்ன வேடிக்கை என்றால், உண்மையான ரெம்டெசிவிர் ஊசி போட்டு தப்பித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையுடன், போலி ஊசி போட்டு தப்பித்தவர்கள் எண்ணிக்கையை ஒப்பிட்டபோது, போலி ஊசி போட்டு தப்பியவர்கள் அதிகம் என்ற அதிசயத்தைக் கண்டு போலீசார் திகைத்துப்போய் இருக்கிறார்கள்.

இது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளிகள் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தி தண்டிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

அது நிறைவேறுமா, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்களா அல்லது அதன் சந்துபொந்துகளின் வழியே தப்பித்துவிடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.