அதைத் தொடர்ந்து இஸ்ரேலும், பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை குறிவைத்து வான்தாக்குதல்களை தொடங்கியது.
ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு நடத்தினாலும், அந்த ராக்கெட்டுகளை நடுவானில் மறித்து அழித்து விடும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
காசாமுனைப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்துகிற வான்தாக்குதல் மிகக்கொடூரமானதாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினருடன் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும் பலியாகி இருப்பதும், இந்தப் பலி தொடர்வதும் சர்வதேச சமூகத்தை அதிர வைத்துள்ளது.
இந்தநிலையில் நேற்று காசாநகரில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், அங்கு அமைந்திருந்த 12 மாடிகளைக்கொண்ட கோபுர கட்டிடம் தீப்பிடித்து எரிந்து, இடிந்து தரை மட்டமானது.
இந்த கட்டிடத்தில்தான் அசோசியேட்டட் பிரஸ், அல்ஜசீரா உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் அமைந்திருந்தன.
இந்த கட்டிடம் இடிந்தபோது அந்தப் பகுதியே புழுதி மண்டலமாக மாறியது. இந்த தாக்குதலை அல்ஜசீரா டி.வி. நேரடியாக ஒளிபரப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த 12 மாடி கோபுர கட்டிடத்தை வீழ்த்தியதின் பின்னணி குறித்து இஸ்ரேல் வாய் திறக்கவில்லை.
இந்த கட்டிடத்தை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அதில் இயங்கிய ஊடக அலுவலகங்களை சேர்ந்தவர்களையும், குடியிருப்புகளில் வசித்து வந்த மக்களையும் வெளியேறுமாறு ராணுவம் உத்தரவிட்ட பின்னர் இந்த தாக்குதலை நடத்தியதால் உயிர்ச்சசேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இருப்பினும் கண்மூடி திறப்பதற்குள் இந்த 12 மாடி கட்டிடம் தரை மட்டமானது நேரில் கண்டவர்களை பதைபதைக்க வைத்தது.
இந்த தாக்குதல் குறித்து அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் தலைவர் கேரி புரூட் கூறுகையில், “இது எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், திகிலுக்கும் ஆளாக்கி உள்ளது. இந்த கட்டிடத்தில் எங்கள் நிறுவனம் இயங்கியதையும், அதில் பத்திரிகையாளர்கள் இருந்ததையும் அவர்கள் (இஸ்ரேல்) அறிவார்கள். இந்த கட்டிடம் தாக்கப்படும் என்பது குறித்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது” என குறிப்பிட்டார்.
காசாநகரில் மக்கள் அடர்த்தி நிறைந்த அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி குறைந்தது 10 பாலஸ்தீனியர்களை கொன்றதைத் தொடர்ந்து இந்த தாக்குதலை அரங்கேற்றி உள்ளது. இதனால் காசாமுனைப் பகுதி பதற்றத்தின் பிடியில் சிக்கி உள்ளது.