நினைவுகளை சிதைக்க முடியுமா ?அகரப்பாவலன்.

350 0

நினைவுகளை சிதைக்க முடியுமா ?

பன்னிரெண்டு ஆண்டுகள்
சுமந்த நினைவுகளை
சிதைக்க முடியுமா ?…

இரத்தமும் சதைகளும்
சிதறிக் கிடந்ததை …
குற்றுயிராய் துடித்ததை …
பிணங்களில் மேல் பாய்ந்து ஓடியதை …
கண்ணெதிரே உறவுகள்
கருகிச் செத்ததை …
காப்பாற்ற மருந்தின்றி
கணப்பொழுதில் மரித்ததை …
கஞ்சித் தட்டேந்திய குழந்தைகளை
செல்விழுந்து அழித்ததை …
உணவின்றி பசித்தீயில் துடித்ததை …
ஓயாத குண்டுகளால் சிதறி ஓடியதை …

நினைவுகளில் இருந்து
சிதைக்க முடியுமா ?
இன்னும் எத்தனை எத்தனை நினைவுகள் …!
தமிழரின் மனங்களென்ன கற்தூண்களா ?…சிதைப்பதற்கு …!
உயிரும் …உணர்வும் சேர்ந்த நினைவுத்தூண்கள் …!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
மனிதத்தை கொன்றவர்களால்
சிதைக்கப்பட்டுவிட்டது …!

மனித நாகரீகம் அற்ற காட்டுமிராண்டிகளால்
சிதைக்கப்பட்டுவிட்டது …!

உடைக்கப்படும் நினைவுத்தூபிகளில் இருந்து
தடைகளை மீறி உணர்வுகள் எழும்… என்பது வரலாறு ..,

உறங்கும் தமிழனை நீயே எழுப்புகிறாய் ! – அது
அறத்தின் வடிவாகி உரத்துடன் நிமிரும் !..

இது மனிதம் மறுத்த மனநோயாளர்களின்
காலம் காலமாய் எழுந்த வியாதியின் வெளிப்பாடு …!

தமிழாராய்ச்சி நினைவுத் தூபியிலிருந்து
இன்றுவரை தொடர்கிறது …

இறந்த உறவுகளை வணங்கி விளக்கேற்றுவது
தடை செய்யப்பட்டு முடக்கும் நிலையெனில் – இது
இன அழிப்பின் உச்சத்தின் கோரப்பற்களால்
தமிழினத்தை அழிக்கும் கொடிய செயலாகும் …!

நினைவுத் தூபிகளை அழிக்க ! அழிக்க !
நினைவில் தூபிகள் செழிக்க ! செழிக்க !
தமிழர் மனங்கள் விழிக்க ! விழிக்க !
தமிழர் தாயகம் பிறக்குமடா !…

நினைவுக் கோயிலில் விளக்கினை ஏற்றி
நினைவுப் பூக்களை தூவியே வணங்கி
மரித்தவர் உணர்வை மனதினில் இருத்தி
உரிமை வென்றிட தடைகளை தகர்ப்போம் !…

“நினைவுத் தூபிகள் சிதைக்கப்படலாம்
நினைவுகளை சிதைக்க முடியாது !”

அகரப்பாவலன்.