இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை? ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது?

397 0

இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் ஈழத் தமிழர்களையும் சீனாவை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளது.

கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் இந்திய தேசம் இரட்டை வேடம் போட்டு வந்த நிலையில், ஈழத் தமிழர்கள் சீனாவை ஆதரிக்கும் போக்கு காணப்படுகிறது.

குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் சீன நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை சீன கலாச்சார அடையாளங்களுடன் வரவேற்கத் தயாராக உள்ளனர்.

IMG_9985.jpg
யாழ்ப்பாணம் வத்திராயன் பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுவரும் சிறுவர் பூங்கா ஒன்று முற்றுமுழுதாக சீன கலாச்சார முறையில் தனி சீன மொழி அடையாளங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதனை யாழ்ப்பாண தமிழ் மக்கள் இன்று வரை எதிர்க்கவில்லை. காரணம் இந்திய தேசம் ஈழத் தமிழர் விடயத்தில் இன்று வரை இரட்டை வேடம் போட்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருவதால் ஈழத் தமிழர்களின் மத்தியில் இருந்த இந்திய ஆதரவு தளம் மெல்ல மெல்ல இல்லாமல் போகும் நிலை உருவாகி வருகிறது.

தற்போது இலங்கை முழுவதும் சீனாவின் ஆளுகைக்குள் வந்துள்ள நிலையில், ஒரு வேளை சீனா ஈழத் தமிழர்களுக்கான உரிமைகளை இலங்கையிடம் இருந்து பெற்றுத் தருமாக இருந்தால், சீன தேசத்துடன் நெருங்கிச் செல்வதை தமிழர்கள் ஒரு போதும் புறக்கணிக்க மாட்டார்கள்.

ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் பிராந்திய நலனை விட தங்களது இன உரிமை போராட்டத்தை நோக்கியே சிந்திக்க வேண்டி உள்ளது. இந்திய தேசம் தனது பிராந்திய நலன்களுக்காக இன்று வரை ஈழத் தமிழர்களின் உரிமை போராட்டத்தைப் பயன்படுத்தி பல இலட்சக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் இன்று வரை பொருட்படுத்தாத இந்தியா, ஈழத் தமிழர்களுக்கான உரிமையை பெற்றுதர மறுத்து வருகின்றது.

இந்தியாவால் ஈழத் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட தமிழர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாமல் இந்திய அரசு தடுமாறி வருகிறது. இந் நிலையில் சீன அரசாங்கம் இலங்கையின் தலைநகரில் தனக்கான ஒரு துறைமுக நகரை உருவாக்கி, அதை சீன அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்குரிய சட்டங்களை இலங்கை அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது.

எனவே பிராந்திய நாடுகளின் பட்டியலில் இந்திய அரசாங்கத்தை விட சீன அரசாங்கத்தினால் இலங்கை மீது அதிகாரத்தை பயன்படுத்த முடியுமாக இருந்தால். ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினை விடயத்தில் ஏன் சீனாவினால் தமிழர்களுக்கு உதவ முடியாது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இந்தியா, சீனா உட்பட அனைத்து நாடுகளும் இலங்கைக்கு போட்டி போட்டுக் கொண்டு உதவின. ஆனால் இன்று இலங்கையில் கால் பதிப்பதற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இலங்கை மீதான தங்களது ஆக்கிரமிப்பு போரை மறைமுகமாக தொடுத்து வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான போர் என்பது மறுமுனையில் பார்க்கப் போனால், அது இலங்கையின் இறையாண்மை மீதும், இறையாண்மை உள்ள தமிழ் மக்கள் மீதும் தொடுக்கப்பட்ட போர்.  அதனை  இலங்கை அரசின் ஊடாக இந்திய சீன அமெரிக்க நாடுகள் நடாத்தி முடித்தன.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுடன் இலங்கை என்ற நாட்டின் அழிவும் ஆரம்பித்து விடுகிறது என்பதற்கு இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் சாட்சியாக அமைந்துள்ளது.

இந் நிலையில் யாரால் கூட்டாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ அவர்களே தமிழ் மக்களின் காலடிக்கு வரும் காலம் உருவாகி வருகிறது.

இலங்கையில் வடகிழக்கின் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள் வாழும் பகுதிகளே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களாக உள்ளன. அவற்றை கைப்பற்றி பிராந்தியத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் போட்டி போட்டு வருகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை தொடர்ந்தும் இந்திய, சீன, அமெரிக்க நாடுகளை ஏமாற்ற முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக எதிர் எதிர் நாடுகளாக உள்ள இந்திய, சீன நாடுகளை சமாந்திரமாக கையாள்வதில் இலங்கை தோல்வி அடைந்துள்ளதோடு, சீனாவுக்கு மிகப்பெரிய ஆதரவை கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் இறையாண்மை மீது சீனா  தற்போது கைவைக்கத் தொடங்கி உள்ளன.

அதாவது இலங்கையின் தலைநகர் கொழும்பில் தனக்கான ஒரு துறைமுக நகரை உருவாக்கி, அதை சீனாவின் தனி அதிகாரம் மிக்க இடமாக மாற்றுவதற்கு இலங்கையின் சட்டத்தை மாற்றும் அளவுக்கு இலங்கையின் இறையாண்மை மீது சீனா கைவைத்துள்ளது.

unnamed-3-1-300x152.jpg

இதே போன்று இந்தியா  தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களான வடகிழக்கு மாகாணங்களை இணைத்து 13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக இலங்கையின் அரசியல் யாப்பு சட்டத்தின் கீழ் தனது அதிகாரத்தை ஏற்கனவே பதிவு செய்த நிலையில், சீனாவின் துறைமுக நகரம் இந்தியாவை மேலும் பல மடங்கு செயற்படத் தூண்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இலங்கையில் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தங்களது உரிமைகளுக்காக போராடி வரும் வடகிழக்கு தமிழர்கள் தங்களது உரிமைகளை, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு எவ்வாறான உபாயங்களை கையாளப் போகின்றார்கள்? யாருடன் இணைந்து தங்களது உரிமைகளை, அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள போகின்றார்கள் என்பதே பலருடைய கேள்வியாக உள்ளது.

அந்த வகையில் இந்தியாவை நம்பி மீக நீண்ட காலம் ஈழத் தமிழர்கள் பயணித்துள்ளதோடு பல இலட்சம் உயிர்களையும் பலி கொடுத்துள்ளனர். இருந்தும் இந்திய தேசத்தின் மீது ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டு, அவர்களை நோக்கியே தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இந்திய தேசம் இலங்கை அரசை திருப்திப்படுத்த முனைகிறதே தவிர ஈழத் தமிழர் பிரச்சினையை தனது பேரம் பேசும் சக்தியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

இந் நிலையில் உலக வல்லரசுகளில் தனிப் பெரும் சக்தியாக மாறியுள்ள சீன தேசத்தை நோக்கியே இலங்கையின் ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் தங்களது இராச்சிய ரீதியான நட்புறவை கட்டி எழுப்பி வருகின்றனர். என்னதான் இந்திய தேசம் தேடிச் சென்று இலங்கைக்கு உதவினாலும், இலங்கை காலத்திற்கு காலம் சீனாவை தேடியே ஓடுகிறது.

எனவே சீனாவும் பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத நாடு என்பதை ஈழத் தமிழர்கள் புரிந்து கொண்டு சீனாவை நோக்கியும் ஈழத் தமிழர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய காலம் உருவாகி உள்ளது. எவ்வாறு ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு எதிர் எதிர் சக்திகளாக இருந்த இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகள் ஒன்றுபட்டு செயற்பட்டனரோ அதே போல் வடகிழக்கில் தங்களது உரிமைகளை அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள ஈழத் தமிழர்களாகிய நாம் இந்தியாவின் எதிரி நாடான சீனா நோக்கி கோரிக்கைகளை முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை.

சீனா தமிழர்களுக்கான அரசியல் அதிகாரத்தை வடகிழக்கு தமிழ் மக்களுக்கு பெற்று தருமாக இருந்தால் ஈழத் தமிழர்கள் சீனாவை ஆதரிக்கும் நிலை உருவாகும்.

தற்போது வடகிழக்கில் சீனா தனது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கி உள்ளது. வடகிழக்கு மாகாணங்களில் சீன நிறுவனங்கள் ஊடாகவும், தனி நபர்களின் ஊடாகவும்  தங்களது அபிவிருத்தித் திட்டங்களை சீனா முன்னெடுத்து வருகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால், சீனா தனது கலாச்சார அடையாளத்துடன் தனி சீன மொழியில் மாத்திரமே தங்களது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இன் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சிகளும் தற்போது சீனா தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தந்தால், அவர்களுடன் இணைந்து செயற்படத் தயார் என்ற நிலைக்கு வந்துள்ளனர் போல் தோன்றுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்தியாவின் ‘உள்வீட்டுப் பிள்ளை’ என்று பொதுப்படையில் அறியப்பட்டவர்.

அவர் இலங்கை -சீன நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களின் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தற்போது இந்தியாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.

இலங்கை -சீன  சங்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஏனைய உபதலைவர்களாக வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி, அரவிந்தகுமார், உதவிச் செயலாளராக மொஹமட் முஸம்மிலும், பொருளாளராக இஷாக் ரஹ்மான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழ் தேசியக் கட்சிகள் சீன அரசாங்கத்தை நோக்கி செல்வதற்கு இந்தியா தான் காரணம் என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் தங்களின் நலன் சார்ந்து மட்டுமே ஈழத்தமிழர்களை பயன்படுத்த முயற்சிப்பதால், அவர்கள் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுதர மாட்டார்கள் என்பதுடன். ஈழத் தமிழர்களை சீனா போன்ற நாடுகளுடன் இணைய விடாது தடுப்பதற்கு மனித உரிமை மீறல்கள், மற்றும் ஜெனிவா களத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் ஊடாக ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

எனவே பிராந்திய வல்லரசுகளை கையாள்வதற்கு ஈழத்தமிழர்கள் தயாராக வேண்டும். இந்து சமுத்திரத்தின் பிராந்திய வல்லரசுகளாக சீனா, இந்திய நாடுகள் தான் உண்டு. ஏற்கனவே பல ஆண்டுகளாக இந்தியாவை கையாண்ட ஈழத் தமிழர்கள் சீனாவை கையாள அல்லது சீனாவுடனான உறவுகளை ஏற்படுத்த  தவறியுள்ளனர். காரணம் இந்தியாவை பகைத்துக் கொள்ள கூடாது என்பதனால்தான். ஆனால் இன்று நிலமை தலைகீழாக மாறிவிட்டது. இந்தியா ஈழத் தமிழர்கள் விடயத்தில் தொடர்ந்தும் ஏமாற்றி வரும் நிலையில், ஈழத் தமிழர்கள் சீனாவின் ஆதரவை பெறுவதை இந்தியா தவறாக கணிப்பிட முடியாது.

இலங்கை விடயத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகப்பெரிய தோல்வி என்றே குறிப்பிட வேண்டும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இலங்கை அரசையும், ஈழத் தமிழர்களையும் கடைசியாக சீனாவின் கால்களில் விழவைத்தது தான் மிச்சம்.

நிலவன்