ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 8 டாக்டர்கள் உள்பட 18 பேர் கைது

630 0

கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் இவர்களை தொடர்பு கொண்டு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்குமா? என்று கேட்பதை தவறாக பயன்படுத்தி கள்ளச்சந்தையில் அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த மருந்து போதுமான அளவு கிடைப்பது இல்லை.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் அலைமோதும் நிலை உள்ளது.

இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மருத்துவத்துறை பணியாளர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனை தடுப்பதற்கு சிவில்சப்ளை சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அந்த பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. வினித்வாங்கடே உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தி, பிரபாகரன் ஆகியோரின் மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.

கடந்த 5-ந்தேதி சூளை தபால் நிலையம் அருகில் இரு சக்கர வாகனத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கடத்தி சென்ற கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 12 மருந்து குப்பிகள் கைப்பற்றப்பட்டது.

இதனை ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய அவர் எடுத்து சென்றது கண்டு பிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் விழுப்புரத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த விபதேவர், முத்துராமன் ஆகியோர் கைதானார்கள்.

இப்படி தொடர்ச்சியாக சிவில்சப்ளை சி.ஐ.டி. போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த வகையில் செங்குன்றத்தில் தினேஷ் என்ற வாலிபரும், திருவாரூரைச் சேர்ந்த டாக்டர் அதிபனும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் செங்கல்பட்டு தாழம்பூரைச் சேர்ந்த இக்பால் என்பவர் கைது ஆனார். தனியார் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் இவரிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மருந்துகள் கைப்பற்றப்பட்டது.

இப்படி கடந்த 10 நாட்களில் 8 டாக்டர்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 டாக்டர்களை தவிர மற்ற 10 பேரும் ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்து கடைகளில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர்.

கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் இவர்களை தொடர்பு கொண்டு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்குமா? என்று கேட்பதை தவறாக பயன்படுத்தி கள்ளச்சந்தையில் அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிவில்சப்ளை சி.ஐ.டி. போலீசார் குற்றவாளிகளை பிடித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகிறார்கள். இது தொடர்பாக தாம்பரம், பல்லாவரம், பள்ளிக்கரணை, வேப்பேரி, கிண்டி, செங்குன்றம், விழுப்புரம், கிருஷ்ணகிரி சிப்காட், செங்கல்பட்டு ஆகிய 9 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் எனவே அதுபோன்ற சட்டவிரோத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் சிவில்சப்ளை சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.