தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாத 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் மீது வழக்கு

281 0

சென்னையிலும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். கடந்த 8-ந்தேதியில் இருந்து இதுவரை ரூ. 70.65 லட்சத்துக்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றினால் அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த 8-ந்தேதி போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அன்று முதல் தினமும் அனைத்து மாவட்டங்களிலும் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 8-ந்தேதியில் இருந்து நேற்று வரை 36 நாட்களில் முகக்கவசம் அணியாத குற்றத்துக்காக 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தினமும் 10 ஆயிரம் பேர் வரை முகக்கவசம் அணியாமல் பிடிபட்டுள்ளனர்.

கடந்த 12-ந்தேதி 10 ஆயிரத்து 502 பேரும், 13-ந் தேதி 10 ஆயிரத்து 852 பேரும் சிக்கி உள்ளனர்.

வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம் ஆகிய 5 மண்டலங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 777 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மண்டலத்தில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 959 பேர் மீதும், மத்திய மண்டலத்தில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் 1.50 லட்சத் துக்கும் அதிகமானோரும் முகக்கவசம் அணியாமல் பிடிபட்டுள்ளனர்.

இதனை தவிர்த்து சென்னைக்கு வெளியே உள்ள நகரப்பகுதிகளில் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. நகர் பகுதிகளில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 16 பேர் பிடிபட்டுள்ளனர்.

இதே போன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காதது தொடர்பாக 30 ஆயிரத்து 737 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெற்கு மண்டலத்தில் 7 ஆயிரத்து 145 வழக்குகளும், மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளும் வடக்கு மண்டலத்தில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளும் போடப்பட்டுள்ளன.
அபராதம்

சென்னையிலும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். கடந்த 8-ந்தேதியில் இருந்து இதுவரை ரூ. 70.65 லட்சத்துக்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் சுற்றுபவர்கள் மீது தினமும் சராசரியாக ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றத்துக்காக சென்னையில் கடந்த 8-ந்தேதி முதல் தற்போது வரையில் ரூ.5½ லட்சம் அளவுக்கு அபராதம் வசூலாகி இருக்கிறது.