தீயாகி வானில் ஒளியான தீபங்கள் !
——————————————
தமிழீழப் போர்க்களம் கண்ட வீரம் !
தமிழரின் மறத்தைப் போற்றிய தீரம் !
தமிழரின் தியாகங்கள் பூத்த மண்ணில்
தமிழீழ நடுகற்கள் தோன்றும் கண்ணில் !
வயிற்றிலே சுமந்த குழந்தையை தாங்கி
கந்தகத் தீயினில் வெந்த தாய்க்கு – அது
தாயும் பிள்ளையும் ஆடிய வீரக் களமடா !
துள்ளி விளையாடிய பள்ளிச் சிறுவரை
அள்ளி விழுங்கி குண்டுகள் அழிகையில் – அது
பள்ளிச் சிறுவர் ஆடிய வீரக் களமாட !
பூத்து மலர்ந்த மங்கையர் கூட்டத்தை
பொஸ்பரஸ் குண்டுகள் எரித்து பொசுக்கையில் – அது
மங்கையர் கூட்டம் ஆடிய வீரக் களமாட !
மணக்கோலம் காணும் புதிய மலர்களை
எரிதணல் தீயது கருக்கிய போது – அது
மணமக்கள் சேர்ந்து ஆடிய வீரக் களமாட !
கணவனும் மனைவியும் வசந்தத்தை காணாமல்
எறிகணை விழ்ந்து மரணித்த போது – அது
கணவனும் மனைவியும் ஆடிய வீரக் களமாட !
மனையின் தலைவாசல் ஒளியாய் துலங்கும்
முதியோரை குண்டுகள் அழித்த போது – அது
முதிர்த்தும் நிமிர்ந்து ஆடிய வீரக் களமாட !
ஈழத்தின் அரணாய் ஓங்கி நின்ற
காடுகளை குண்டுகள் அழித்த போது – அது
ஈழத்தின் காடுகள் ஆடிய வீரக் களமாட !
அனைத்தையும் காத்து நின்ற வீரரை
பல்குழல் குண்டுகள் அழித்த போது – அது
மறவர்கள் ஆகுதியாகி ஆடிய வீரக் களமாட !
அகரப்பாவலன்.