முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பு எம் மீதான அடக்குமுறையின் அதியுச்சம்

315 0

முள்ளிவாய்கால் நினைவிட அழிப்பு எம்மீதான அடக்குமுறையின் அதியுச்சம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழினப் படுகொலையின் துயரச் சின்னமாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டதோடு, அங்கிருந்த நினைவுக்கல்லும் காணாமலாக்கப்பட்டிருப்பதை, எம் மீது இந்த அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்குமுறையின் அதியுச்ச வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது.

இறுதிப்போரின் போதான துயரக் கணங்களில் தமது அன்னையை, தந்தையை, கணவனை, மனைவியை, குழந்தையை, குடும்பத்தை என்று துடிக்கத் துடிக்க தம் உறவுகளின் உயிர்களைப் பறிகொடுத்த இழப்பும், துயரமும் இன்னமும் தீராத எம்மவர்கள் அந்த வேதனைகளின் புகலிடமாகவும், தம் உறவுகளின் நினைவிடமாகவும் தான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை தம் நெஞ்சங்களில் நிறைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு மே.18 இலும், அந்த நினைவுமுற்றத்தில் கூடி இறந்துபோன உறவுகளை நினைந்துருகி, கண்ணீர் விட்டு கதறியழுவதன் மூலம் தம் மனப்புண்களுக்கு தாமே மருந்திட்டுக் கொண்ட எமது மக்களின் அடிப்படை மன நிறைவைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாது

அதனை அடியோடு சிதைக்கும் விதமாக முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அதிகார வர்க்கத்தின் சப்பாத்துகளும், துப்பாக்கி முனைகளும் இரவோடு இரவாக துவம்சம் செய்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் இதயவாசல்களையும் இடித்துப்பெயர்த்தது போன்ற துக்கிப்பைத் தந்துள்ளது.

காலம்காலமாக சிங்களக் காடையர்கள் எம்மினத்தின் மீது வலிந்து பிரயோகிக்கும் வலிகளின் தொடர்ச்சி இது! இத்தகைய வன்மம் நிறைந்த செயல்களை இந்த அரசு தொடர்ச்சியாக அரங்கேற்றி வருவது கடும் கண்டனத்துக்குரியது
.
இறந்தவர்களை எண்ணி பொதுவெளியில் நினைந்துருகத் தடை விதிக்கவும், நினைவிடங்களை இடித்தழிக்கவும் தான் அரசாலும், அரச படைகளாலும் முடியுமே தவிர எம் ஆழ்மன வெளியெங்கும் அடர்ந்து படர்ந்திருக்கும் உறவுகளின் நினைவுகளை தகர்க்கவோ, மனங்களின் நினைவேந்தல்களை தடுக்கவோ முடியாது. காலம் காலமாக நாம் கடந்துவந்த இரத்தமும், துயரமும் தோய்ந்த இவ் எல்லாப் பழிகளுக்கும் காலமும், வலுவான காத்திருப்பும் கட்டாயம் வழிசொல்லும் என்ற நம்பிக்கையோடு, எம் உறவுகளை நெஞ்சிருத்தி அஞ்சலித்து தொடர்ந்து பயணிப்போமாக!