தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தி இருப்பது, தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத நடவடிக்கை ஆகும்.தலைமைச் செயலாளருக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனையின்போது 30 லட்சம் ரூபாய் தொகையும், 5 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைமைச் செயலாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் புதிய 2000 ரூபாய் தாள்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீடுகளிலும், அலுவலகங்களிலும் நடத்திய சோதனையில் 147 கோடி ரூபாய் பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.இதில் 33 கோடி ரூபாய் அளவுக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஊழலில் ஈடுபட்ட எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கோடி கோடியாக குவிக்கப்பட்ட பணமும், கிலோ கணக்கில் வாங்கிக் குவிக்கப்பட்ட தங்கக் கட்டிகளும், கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களும் ஊழலின் பிரம்மாண்ட அளவை பிரதிபலிக்கின்றன. வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசுடைமை ஆக்க வேண்டும்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளரை பதவி நீக்கம் செய்து, சட்டபூர்வமான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் புரையோடிப்போய் உள்ள ஊழலை ஒழிப்பதற்கு இத்தகைய நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.