முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை- அரசுதான் குழப்பங்களை ஏற்படுத்துவதாக நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு குற்றச்சாட்டு

295 0

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமைப்போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தும் வகையில் கலந்துகொண்ட தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ்.குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதி அருட்பணி செல்வன் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அமைதியான முறையில் முன்னெடுக்கவே ஆசைப்படுகின்றோம்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தரவைக்கு குறைவானவர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுத்து இருக்கின்றோம்.

ஆகவே ஏனைய அனைவரும், தங்களது வீடுகளிலேயே சுடரேற்றி அஞ்சலி செலுத்துமாறு வடகிழக்கு பொது கட்டமைப்பு கோருகின்றது.

இதேவேளை முள்ளிவாய்க்காலிலுள்ள நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளமை மற்றும் நடுகல்லை நாட்டுவதற்காக எடுத்து வந்தவர்களை, இலங்கை படைகளும் பொலிஸாரும் தடுத்தமையினால் அவர்களிடமே அதனை கைவிட்டு சென்றிருந்தனர்.

ஆகவே இவ்விடயத்திற்கு அவர்களே பொறுப்பு கூற வேண்டும். அரசுதான் தற்போது குழப்பங்களை ஏற்படுத்துகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.