விடுதலைக்காக போராடிய இனம் நினைவுக் கல்லறைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது- சிவகரன்

330 0

விடுதலைக்காக போராடிய இனம் நினைவுக் கல்லறைக்காக போராட வேண்டிய நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் வி.எஸ்.சிவகரன் மேலும் கூறியுள்ளதாவது, “இனத்தை அழித்தவனிடமே அழுவதற்கு கூட அனுமதி கோர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இராணுவ அடக்கு முறை தமிழர் பகுதிகளில் தொடர்ந்து நிலவுகின்றது. இவை அச்சுறுத்தலாகவே அவர்களுக்கு  காணப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலைகள் காணப்படும் வரை  நல்லிணக்கம், சகவாழ்வு இனத்துவ ஐக்கியம் என்பவைகள் சாத்தியப்படப்போவது இல்லை.

கடந்த 12 ஆண்டுகளாக நீதி கோரி போராடும் உறவுகளுக்கு பொது வெளியில் ஓலமிட்டு அழ முடியாத நிலைமை உலகில் எந்த இனத்திற்கும் ஏற்படக்கூடாது.

அதாவது இன விடுதலைக்காக  போராடிய இனம், தற்போது உறவுகளின் நினைவுக் கல்லறைக்காக போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமையானது மிகவும் வேதனையாக இருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.