கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது என்பதற்காக தூக்கில் தொங்க முடியுமா?: சதானந்தகவுடா கேள்வி

295 0

ஆக்சிஜன் உற்பத்தி, வினியோகத்தை 3 மடங்கு அதிகரித்துள்ளோம். கர்நாடகத்திற்கு ஆரம்பத்தில் 300 டன் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது. அதை தற்போது 1,015 டன்னாக அதிகரித்துள்ளோம்.

மத்திய மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி

அளிக்கையில் கூறியதாவது:-

மாநிலங்களில் மருத்துவ சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கப்படுகிறது. இந்த ரெம்டெசிவிர் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த மருந்ைத இந்தியாவில் 7 நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மருந்துகளை 3 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். கொரோனா முதல் அலையின்போது இதன் உற்பத்தி நன்றாக இருந்தது. கொரோனா பரவல் குறைந்தபோது, அவற்றின் உற்பத்தியும் குறைக்கப்பட்டது. அந்த நிறுவனங்களில் தற்போது 1.05 கோடி டோஸ் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த மருந்தின் ஏற்றுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் திடமான நடவடிக்கைகளால் அனைத்து மாநிலங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கிறது. இவற்றுக்கு எங்கும் பற்றாக்குறை ஏற்படவில்லை. இவற்றின் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து குறைத்து ரூ.3,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்திற்கு 5.75 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தையில் இந்த மருந்து விற்பனை செய்யப்படுவதை தடுக்க மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மருந்தை அத்தியாவசிய சேவைகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

டுஸ்லிஜுமாப் என்ற மருந்து மிக முக்கியமானதாக உள்ளது. இதன் விலை ரூ.34 ஆயிரம். இந்த மருந்து 10 ஆயிரம் குப்பிகள் உள்ளன. இதில் கர்நாடகத்திற்கு 1,050 குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளனன. தேவைப்பட்டால் இன்னும் கூடுதலாக ஒதுக்கவும்

தயாராக உள்ளோம். பல்வேறு மருந்துகளுக்கு தேவையான கச்சா பொருட்கள் நம்மிடம் உள்ளது. ஐவர்மெக்டான் ஊசி மருந்துக்கு அதிக தேவை எழுந்துள்ளது. இவற்றை அதிகளவில் உற்பத்தி செய்வது தொடர்பாக மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினேன். மருந்து பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் சில இடங்களில் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு நான் வருத்தத்தை தெரிவிக்கிறேன். ஆக்சிஜன் உற்பத்தி, வினியோகத்தை 3 மடங்கு அதிகரித்துள்ளோம். கர்நாடகத்திற்கு ஆரம்பத்தில் 300 டன் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது. அதை தற்போது 1,015 டன்னாக அதிகரித்துள்ளோம்.

யாதகிரி, கோலார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளோம். நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில் மூலம் ஆக்சிஜன் அனுப்புகிறோம். பாதுகாப்பு ஆராய்ச்சித்துறை புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. பிரச்சினைகளுக்கு மத்திய அரசு விரைவாக தீர்வு காண்கிறது. கொரோனா தடுப்பூசி வினியோகம் செய்வது என்பது பெரிய சவாலாக உள்ளது. நாட்டில் இதுவரை 17.22 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்திற்கு 2,913 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 1.09 கோடி டோஸ் தடுப்பூசி கர்நாடகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 75 ஆயிரம் டோஸ் தடுப்பூசி அடுத்த சில நாட்களில் கர்நாடகத்திற்கு வரவுள்ளது. தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி வினியோகம் செய்யப்படும். ஸ்புட்னிக் தடுப்பூசி 5 கோடி டோஸ் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 75 ஆயிரம் டோஸ் வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆலோசனை கூற வேண்டும். அதை விடுத்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியல்ல. நெருக்கடியான நேரத்தில் அரசுக்கு துணை நிற்க வேண்டும்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக கர்நாடகத்திற்கு பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.303 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உரம் விலையை பழைய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.

இந்த பேட்டியின்போது பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உடன் இருந்தார். சதானந்தகவுடாவிடம், ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்யும்படி ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து கேள்வி கேட்டபோது அதற்கு அவர்,  “உற்பத்தியை பொறுத்து தானே மாநிலங்களுக்கு மருந்து ஒதுக்க முடியும். கோர்ட்டு உத்தரவிட்டது என்பதற்காக தூக்கில் தொங்க முடியுமா?” என்று கூறினார்.